அவங்களா கிளப்பி விடுறாங்க… முதல்வர் பதவி விவகாரத்தில் திருமாவளவன் கொடுத்த அதிரடி விளக்கம்!
VCK Leader Thirumavalavan : தமிழகத்தில் திமுக - அதிமுக, தவெக தொடர்பாக முதல்வர் பதவி விவகாரம் தொடர்பாக பல்வேறு கேள்விகள், வியூகங்கள் உள்ளிட்ட எழுந்து வந்த நிலையில், அனைத்துக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக ஆதரவுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தமிழகத்தின் முதல்வராக வரவேண்டும் என்று பலர் கூறியதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் சென்னை வேளச்சேரியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் என்ற முறையில் ஆதரவு விவகாரம் தொடர்பாக அதிகாரப்பூர்வமாக செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தேன். அந்த அறிவிப்பில் நாங்கள் திமுக கூட்டணியில் தொடர்வதாகவும், தவெகவுக்கு ஆதரவு மட்டும் அளிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தேன். தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், நான் முதல்வர் ஆக வேண்டும் என்று யாரோ ஒருவர் கூறியிருந்தார். இது தொடர்பாக நான் எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை. திமுக மற்றும் அதிமுக என்னை அதிகாரப்பூர்வமாக அணுகவில்லை.
திமுக கூட்டணியில் இருந்தவாறு தவெகவுக்கு ஆதரவு
தமிழகத்தின் முதல்வராக திருமாவளவன் வர வேண்டும் என்று எங்களது கட்சியின் பொதுச்செயலாளர் ஒருவர் கருத்து தெரிவித்திருந்தார். அதற்கும் நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். இறுதியான முடிவை எடுக்காத நிலையில் இது போன்ற கருத்து வெளியிட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. நாங்கள் ஆரம்பத்தில் இருந்து திமுக கூட்டணியில் இருந்தாலும் தவெகவுக்கு ஆதரவு வழங்குவது தவறில்லை என்ற நிலைபாட்டை எடுத்துள்ளோம். கம்யூனிஸ்ட் கட்சிகள் முடிவை அறிவித்த உடனேயே நாங்களும் அறிவிக்க வேண்டும் என்று பலர் எதிர்பார்த்தனர்.
மேலும் படிக்க: தேர்தல் பணிகளை செய்யாமலேயே தவெக ஆட்சிக்கு வந்துள்ளது.. மு.க.ஸ்டாலின் அதிரடி குற்றச்சாட்டு!




இரு எம்எல்ஏக்களுடன் எந்த கட்சியிடம் பேரம் பேசுவது
விடுதலை சிறுத்தைகள் தனி கட்சியாக செயல்பட்டு வருகிறது. அந்த கட்சி சார்ந்த நபர்களிடம் கலந்து ஆலோசித்து அதன் பின்னரே முடிவு அறிவிக்க முடியும். ஆனால் முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என்று பலர் எதிர்பார்த்திருந்தனர். இந்த தாமதத்துக்கான இடைவெளியை அவர்கள் பேரம் பேசுவதாக அவதூறுகளை பரப்புவது எந்த விதத்தில் நியாயமாகும். விசிக வசம் 2 எம்எல்ஏக்களை வைத்துக்கொண்டு யாரிடமும் பேரம் பேசவில்லை. தமிழக வெற்றி கழகத்துடன் பேரம் பேசுவதற்கு ஆட்கள் கிடையாது.
தமிழகத்தில் பட்டியலினத்தவர் முதல்வராவது எளிதல்ல
விசிகவில் இருந்து தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதவ் அர்ஜூனா சென்றிருந்தாலும் அவர் மூலமாக நாங்கள் பேசியது கிடையாது. தவெக எங்களை தொடர்பு கொண்ட போது, நிபந்தனை இல்லாத ஆதரவு தெரிவிப்பதாகவும், அதனையும் சிலரோடு கலந்து பேசி முடிவை அறிவிப்பதாக தெரிவித்திருந்தோம். தமிழகத்தில் பட்டியல் இனத்தை சேர்ந்தவர் முதல்வர் ஆவது அவ்வளவு எளிதல்ல. குடியரசுத் தலைவர் ஆட்சியை தடுக்கவே தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தோம் என்று தெரிவித்தார். இதனிடையே, செய்த சேனலுக்கு பேட்டியளித்த திருமாவளவன் முதல்வர் பதவி தொடர்பாக தொலைபேசியில் அழைப்பு வந்ததாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: தவெக அரசின் உண்மை முகத்தை மக்கள் உணர தொடங்கிவிட்டனர்… எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி!