அதிமுக எம்எல்ஏக்களுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்படுமா? கே.ஏ.செங்கோட்டையன் அளித்த பதில்!
Minister KA Sengottaiyan : தமிழக வெற்றிக் கழக அமைச்சரவையில் அதிமுக எம். எல். ஏ.க்களுக்கு இடம் வழங்கப்படுமா என்பது குறித்து கேள்விக்கு நிதித்துறை அமைச்சரும், கட்சியின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளருமான கே. ஏ. செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார் .
தமிழகத்தின் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், நேற்று சனிக்கிழமை ( மே 16) முதல்வர் விஜய்யுடன் சேர்த்து 10 அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதன்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சரவை மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டு, இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழக அமைச்சரவை தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும், நிதித்துறை அமைச்சருமான கே. ஏ. செங்கோட்டையன் கோயம்புத்தூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல் அமைச்சர் ஜோசப் விஜய் என்ன நினைக்கிறாரோ அதனை நிறைவேற்ற வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. அமைச்சரவை என்பது இப்படி தான் இருக்கும். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் முதலில் 7 பெயரை அமைச்சர்களாக நியமிப்பார்.
அதிமுகவை போலவே தவெக அமைச்சரவை
அதன் பிறகு, அதிமுக அமைச்சரவை படிப்படியாக விரிவாக்கம் செய்யப்படும். இதே போல தான் தமிழக வெற்றிக்காக ஆட்சியிலும் தமிழக அமைச்சரவை படிப்படியாக விரிவாக்கம் செய்யப்படும். இந்த விவகாரத்தை பொருத்தவரை முதல் அமைச்சர் ஜோசப் விஜய் நிலையில் இருந்து இயக்க வேண்டியதாகும். எனவே, இந்த விவகாரத்தில் முதல்வர் தான் முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். அப்போது, தமிழக அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் இடம் பெறுவார்களா. அப்படி இடம் பெற்றால் அவர்களுக்கு எத்தனை அமைச்சர் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
மேலும் படிக்க: முதல்வராக முதல் டெல்லி பயணம்.. பிரதமர் மோடியை சந்திக்கிறார் ஜோசப் விஜய்.. நேரம் ஒதுக்க கோரிக்கை!




அமைச்சரவையில் அதிமுகவினர் இடம் பெறுவார்களா
அதற்கு, நீங்கள் தான் சொல்ல வேண்டும். இது தொடர்பாக நாங்கள் தற்போது வரை ஒன்றும் பேசவில்லை என்று அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார். தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்று கடந்த மே 10- ஆம் தேதி ஆட்சி அமைத்தது. சுமார் ஒரு வாரம் ஆன நிலையில் நேற்று அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அமைச்சரவை மேலும் விரிவாக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம்
இதில், கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்எல்ஏக்களுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 5 எம்எல்ஏக்களில் 2 எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்குவது கிட்டத்தட்ட உறுதியாக உள்ளது. மீதமுள்ள அமைச்சர் இடங்களை விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் அதிமுகவுக்கு வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: அதிமுகவில் நீடிக்கும் உள்கட்சி பூசல்.. மேலும் 2 மாவட்ட செயலர்களை நீக்க எடப்பாடி பழனிசாமி உத்தரவு!