முதல்வராக முதல் டெல்லி பயணம்.. பிரதமர் மோடியை சந்திக்கிறார் ஜோசப் விஜய்.. நேரம் ஒதுக்க கோரிக்கை!
CM Joseph Vijay Meet PM Modi : டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் சந்திப்பதற்கு முதல்வர் அலுவலகம் சார்பில் நேரம் கேட்கப்பட்டுள்ளது. அதன்படி, வருகிற 20- ஆம் தேதிக்கு மேல் இந்த சந்திப்பு நிகழும் என தெரிகிறது.
தமிழகத்தில் தமிழக வெற்றி கழகம் கடந்த மே 10- ஆம் தேதி புதிய அரசாக பொறுப்பேற்றது. முதல்வராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றார். அப்போது, தமிழகத்தின் வளர்ச்சிக்காக அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களை நேரில் சந்திக்க உள்ளதாக தெரிவித்தார். அதன்படி, திராவிட கழக தலைவர் கி. வீரமணி, திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மு. க. ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை மற்றும் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான எஸ். பி. வேலுமணி, சி. வெ. சண்முகம் ஆகியோரை நேரில் சந்தித்து பேசி இருந்தார்.
பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்ட முதல்வர் அலுவலகம்
இதே போல, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோரை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியானது. அதன்படி, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சந்திப்பு தொடர்பாக பிரதமர் அலுவலகத்திற்கு நேரம் கேட்டு மின்னஞ்சல் அனுப்பப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடி 6 நாட்கள் அரசு முறை பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்றுள்ளார்.
மேலும் படிக்க: மக்களை நிற்க வைக்கக்கூடாது.. அமரவைத்து தான் பேச வேண்டும்.. முதல்வர் விஜய்யின் அடுத்த அதிரடி!!




வெளிநாட்டு சுற்றுப்பயணம் முடிந்து சந்திப்பு
அங்கிருந்து பிரதமர் மோடி நெதர்லாந்து, சுவீடன், நார்வே, இத்தாலி ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த பயணத்தை முடித்துவிட்டு வருகிற மே 20- ஆம் தேதி ( புதன்கிழமை) இந்தியா திரும்புகிறார். இதன் பின்னர் பிரதமர் நரேந்திர மோடியை, தமிழக முதல்வர் விஜய் சந்திக்க திட்டமிட்டு இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. அதன்படி, இந்த சந்திப்புக்காக பிரதமர் அலுவலகம் நாள் மற்றும் நேரம் ஆகியவை ஒதுக்கப்பட்டு முதலமைச்சர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்படும் என்று பிரதமர் அலுவலக வட்டாரங்கள் கூறுகின்றன.
பிரதமர் மோடியிடம் விஜய் வலியுறுத்தும் கோரிக்கைகள்
அதன்படி, பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போது தமிழகத்துக்கான ஜிஎஸ்டி முழு நிலுவைத் தொகை, வெல்ல நிவாரண நிதி, கல்வி திட்ட நிதி உள்ளிட்டவை குறித்து வலியுறுத்த இருப்பதாகவும், சென்னை மெட்ரோ 2- ஆம் கட்ட பணி, நெடுஞ்சாலை, துறைமுக திட்ட விரிவாக்கம் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புகளுக்கு மத்திய அரசின் ஒப்புதல் ஆகியவற்றை பெறுவது தொடர்பாக என்பன உள்ளிட்டவை தொடர்பாக பேசி வலியுறுத்துவார் என்று தெரிகிறது. இந்த பயணத்தின் போது காங்கிரஸ் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளின் தலைவர்களையும் விஜய் சந்தித்து இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: திருச்சி கிழக்கில் மு.க.ஸ்டாலின் போட்டி? தூத்துக்குடி திமுகவினர் தீர்மானம்