AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி!”.. 100 நாள் சாதனைத் திட்டங்களை பட்டியலிட்டு முதல்வர் விஜய் பெருமிதம்!!

TVK Govt 100 Days Achievements: தவெக அரசின் 100 நாள் ஆட்சி ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி" எனக் குறிப்பிட்டு முதல்வர் விஜய் பெருமிதம் தெரிவித்துள்ளார். 717 மதுபான கடைகள் மூடல், 200 யூனிட் இலவச மின்சாரம், பயிர்க்கடன் தள்ளுபடி, மகளிர்க்கான தங்க மோதிரம் மற்றும் தங்க நாணயம் திட்டம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட சாதனைத் திட்டங்களை பட்டியலிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

“ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி!”.. 100 நாள் சாதனைத் திட்டங்களை பட்டியலிட்டு முதல்வர் விஜய் பெருமிதம்!!
முதல்வர் விஜய்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 17 Aug 2026 08:22 AM IST

சென்னை, ஆகஸ்ட் 17: தமிழகத்தில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்து வெற்றிகரமாக 100 நாட்களை நிறைவு செய்துள்ளது. 100வது நாளில் அடியெடுத்து வைத்துள்ள இந்த வரலாற்றுத் தருணத்தைக் கொண்டாடும் வகையில், “தவெக அரசின் 100 நாள் ஆட்சி என்பது ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி” என்று முதல்வர் விஜய் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அதிகாரப்பூர்வ தமிழக முதல்வர் எக்ஸ் தளப் பக்கத்தில், 100 நாள் சாதனைகளை விளக்கும் வீடியோ மற்றும் முழுப் பக்க அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில், கடந்த 100 நாட்களில் நிறைவேற்றப்பட்ட முக்கிய நலத்திட்டங்கள், அவற்றுக்காக ஒதுக்கப்பட்ட கோடிக்கணக்கிலான நிதி விவரங்கள் மற்றும் அரசு எடுத்த அதிரடி முடிவுகளை அவர் விரிவாகப் பட்டியலிட்டுள்ளார்.

இதையும் படிக்க : கோவையில் இறந்த மாணவரின் சகோதரருக்கு அரசு வேலை…நிவாரணமாக 6 லட்சம் – அமைச்சர் அறிவிப்பு

மகளிர், இளைஞர்களுக்கான முக்கிய திட்டங்கள்:

தமிழக வெற்றிக் கழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் மகளிரின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கு அதிக முன்னுரிமை அளித்து வருகிறது. அந்த வகையில், ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், ‘தாய்மாமன் தங்கமோதிரம்’ திட்டத்திற்காக ₹560 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ‘அண்ணனின் திருமண நன்னாள்’ திட்டத்தின் கீழ், பயன்பெறும் குடும்பங்களுக்கு 8 கிராம் தங்க நாணயமும் பட்டுப்புடவையும் வழங்கும் நோக்கில் ₹812 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பெருக்கும் வகையில் நடத்தப்பட்ட ‘வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு’ மூலமாக ₹1 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. அதேபோல, ‘வெற்றி திறன் பயிற்சி’ திட்டத்தின் வாயிலாக 12 லட்சம் மாணவர்களுக்கும் 1 லட்சம் இளைஞர்களுக்கும் தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. 11-ஆம் வகுப்பு பயிலும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு ஹெல்மெட் மற்றும் வாட்டர் பாட்டில் வசதிகளுடன் கூடிய நவீன பிராண்டட் சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

விவசாயிகள் நலன், கிராமப்புற மறுமலர்ச்சி நிதி ஒதுக்கீடு:

வேளாண் துறை மேம்பாட்டிற்காக அதிரடி சலுகைகளை தவெக அரசு அறிவித்துள்ளது. விவசாயிகளின் சுமையைக் குறைக்கும் பொருட்டு ரூ.6,000 கோடி மதிப்பிலான பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. அதோடு, கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.4,000 மற்றும் நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,750 சிறப்பு ஊக்குத்தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற உட்கட்டமைப்பு, குடிநீர், சுகாதாரம் மற்றும் சாலை வசதிகளை மேம்படுத்த ‘டிஎன் வெற்றி கிராமப்புற மறுமலர்ச்சி’ திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு ரூ.6,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

எளிய மக்களின் வீட்டுப் பயன்பாட்டிற்காக 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ‘வெற்றி வீடு’ திட்டத்தின்கீழ் ஏழைகளுக்கு வீடுகள் கட்டித்தர ரூ.3,500 கோடியும், ‘வெற்றி மடிக்கணினி’ திட்டத்திற்கு ரூ.2,000 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், காமராஜர் காலை உணவு திட்டத்திற்காக ரூ.210 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சட்டஒழுங்கு, மதுவிலக்கு வெளிப்படையான நிர்வாகம்:

சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த 65 சிறப்பு அதிரடிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் முதற்கட்டமாக 717 மதுபானக் கடைகள் மூடப்பட்டு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 150 நாட்கள் உத்தரவாத வேலைவாய்ப்பை வழங்கும் ‘வெற்றி 150’ திட்டம் மற்றும் கிராமப்புற மகளிருக்கான ஆடுகள் வளர்ப்புத் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளன.

இதையும் படிக்க : உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி – இந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை – வானிலை மையம் தகவல்

நிர்வாக சீர்திருத்தங்களைப் பொறுத்தவரை, சிஎம்டிஏ எல்லைக்குள் பல அடுக்குமாடிக் கட்டடங்களுக்கான அனுமதி முறைகள் எளிமையாக்கப்பட்டு, நேரடித் தொடர்பற்ற பத்திரப்பதிவு வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறாக 20-க்கும் மேற்பட்ட பிரதான திட்டங்களை நிறைவேற்றி, வெளிப்படையான மற்றும் நேர்மையான நிர்வாகத்தை 100 நாட்களில் வழங்கியிருப்பதாக முதல்வர் விஜய் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

Follow Us