உருவக்கேலி செய்து பேசினாரா மு.க.ஸ்டாலின்? தாராபுரம் பேச்சு சர்ச்சைக்கு விளக்கம் கொடுத்த சேகர்பாபு!
Sekar Babu Clarifies MK Stalin Speech: தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது குறித்து எழுப்பப்பட்ட சர்ச்சைகளுக்கு பி.கே.சேகர்பாபு விளக்கமளித்துள்ளார். பெண்மையைப் போற்றுபவர் ஸ்டாலின் என்றும், வேட்பாளரின் நடவடிக்கையைக் குறிப்பிடவே அந்தச் சொல் பயன்படுத்தப்பட்டதே தவிரத் தனிப்பட்ட விமர்சனம் அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை, அக்.03: தமிழ்நாட்டில் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்களின் பிரச்சார உரைகளும், அதற்கு எதிரான விமர்சனங்களும் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக, தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய பேச்சு உருவக்கேலி மற்றும் தனிப்பட்ட விமர்சனமாக அமைந்திருப்பதாக மாற்றுக் கட்சியினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இச்சூழ்நிலையில், இக்குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களைச் சந்தித்து விரிவான விளக்கங்களை அளித்துள்ளார்.
இதையும் படிக்க: “ஸ்டாலின் பேச்சில் ஆபாசமும் வக்கரமும்!”.. தவெக வேட்பாளர் சத்தியபாமா விவகாரத்தில் கொந்தளித்த விஜய்!
ஸ்டாலின் பேச்சுக்கு விளக்கம்:
பிரச்சாரத்தின் போது ஸ்டாலின் பயன்படுத்திய வார்த்தைகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த சேகர்பாபு, “எங்களது தலைவர் மு.க.ஸ்டாலினைப் பொறுத்தவரையில் அவர் பெண்ணினத்தின் பேரொளியாகத் திகழ்பவர். எந்த இடத்தில் பெண்மைக்கு ஒரு தீங்கு நேர்ந்தாலும், அது சொந்தக் கட்சிக்காரர்களே தவறழைத்தாலும் அவர்கள் மீது துணிந்து கடுமையான நடவடிக்கை எடுக்கக்கூடியவர். தேர்தல் பரப்புரையில் அந்த வேட்பாளர் மேற்கொண்ட நடவடிக்கையைக் குறிப்பிடுவதற்காகவே அந்தச் சொல் பயன்படுத்தப்பட்டதே தவிர, தனிப்பட்ட முறையில் அந்த வேட்பாளரை விமர்சிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட சொல் அல்ல” என்று தெளிவுபடுத்தினார்.
குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடி:
திமுக மற்றும் அதிமுக இடையே கள்ளத்தொடர்பு இருப்பதாகத் தவெக தரப்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டைக் குறிப்பிட்ட செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “கள்ளத்தொடர்பு என்பது தவெகவிற்கு கைவந்த கலை, அதற்குள் நான் நுழைய விரும்பவில்லை” என்று விமர்சித்தார். மேலும், “சினிமா டிக்கெட்டுக்கும் குடமுழுக்கு டிக்கெட்டுக்கும் வித்தியாசம் தெரியாத ஒருவர், பல ஊர்களில் சுற்றித் திரிந்துவிட்டு இப்போதுதான் ஒரு இடத்தில் செட்டில் ஆகியிருக்கிறார். திமுகவைப் பொறுத்தவரையில் யாரை எதிர்த்தாலும் வெளிப்படையாக எதிர்க்கும், ஆதரித்தாலும் உறுதியாக ஆதரிக்கும்; அதற்குச் சிறந்த உதாரணம் நெருக்கடி நிலை காலம்” எனத் தெரிவித்தார். தாராபுரம் இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றி வாய்ப்பு குறித்துச் செய்தியாளர்கள் கேட்டபோது, “திமுகவின் வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இதையும் படிக்க: ஜெம் வீரமணி வழக்கில் அதிரடி திருப்பம்.. மு.க.ஸ்டாலின், ரகுபதியிடம் விசாரணை நடத்த சிறப்பு குழுவில் மனு!!
முதல்வர் விஜய்யின் விமர்சனம்:
முன்னதாக, தாராபுரம் தவெக வேட்பாளர் சத்தியபாமாவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருவக் கேலி செய்து, மிகவும் அநாகரிகமான முறையில் பேசி புளகாங்கிதம் அடைந்துள்ளதாகத் தவெக தலைவர் முதல்வர் விஜய் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். தேர்தல் பிரச்சாரம் என்ற பெயரில் அவதூறு மற்றும் அநாகரிகக் கூட்டங்களை மு.க.ஸ்டாலின் நடத்தி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பெண்களை ஆபாசமாகவும் இழிவாகவும் பேசி வரும் தீயசக்தியாக திமுக செயல்பட்டு வருகிறது என்றும், தமிழகப் பெண்களின் உடன்பிறந்த சகோதரனாக நின்று இந்த கண்டனத்தைப் பதிவு செய்வதாகவும் முதல்வர் விஜய் கொந்தளித்துள்ளார்.