செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பம் தற்போது பல்வேறு துறைகளில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அதே நேரத்தில், இந்தத் தொழில்நுட்பத்தை தவறான வழியில் பயன்படுத்துவதும் அதிகரித்து வருகிறது. அப்படியொரு அதிர்ச்சி சம்பவம் தென்கொரியாவில் நடைபெற்ற தேசிய அளவிலான வரி கணக்காளர் தகுதித் தேர்வில்நடந்துள்ளது. தென்கொரியாவில் நடைபெற்ற தேசிய அளவிலான வரி கணக்காளர் தகுதித் தேர்வில் ஒருவர் 400 மதிப்பெண்களுக்கு 397.5 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்திருந்தார். மொத்தம் 160 கேள்விகள் கொண்ட முதல் கட்டத் தேர்வில் ஒரே ஒரு கேள்விக்கு மட்டுமே அவர் தவறாகப் பதிலளித்திருந்தார். இதனால் அவரது மதிப்பெண்கள் குறித்து மற்ற தேர்வர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்தது. அவர் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மோசடி செய்திருக்கலாம் என்றும் சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆரம்பத்தில் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்த அவர், தற்போது தனது தவறை ஒப்புக்கொண்டு காவல்துறையிடம் சரணடைந்துள்ளார். அவர் செய்த மோசடி முறைதான் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தேர்வு அறைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சிறிய கேமரா மூலம் கேள்வித்தாளைப் புகைப்படம் எடுத்துள்ளார். பின்னர் அந்தப் படங்களை AI தொழில்நுட்பத்திற்கு அனுப்பி அதிலிருந்து கிடைத்த பதில்களை ஸ்மார்ட்போன் மூலம் பார்த்துத் தேர்வில் எழுதியுள்ளார். முதல் கட்டத் தேர்வு மட்டுமின்றி, ஜூலை மாதம் நடைபெற்ற இரண்டாம் கட்டத் தேர்விலும் இதே முறையைப் பயன்படுத்தி மோசடி செய்ததாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், தனது மோசடி குறித்து எழுத்துப்பூர்வமான வாக்குமூலத்தையும் சியோல் காவல்துறையிடம் அளித்துள்ளார்.