அமெரிக்காவில் கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்களின் விசா காலத்தை நான்கு ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தும் டிரம்ப் நிர்வாகத்தின் திட்டத்தை அந்நாட்டு நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. கடந்த ஜூலை மாதம் அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை புதிய விசா கட்டுப்பாடுகளை முன்மொழிந்திருந்தது. அதன்படி, வெளிநாட்டு மாணவர்கள் நான்கு ஆண்டுகளுக்கு மேல் அமெரிக்காவில் தங்க வேண்டுமென்றால், மத்திய அரசிடம் சிறப்பு அனுமதி பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், படிப்பு முடிந்த பிறகு நாட்டை விட்டு வெளியேற வழங்கப்படும் 60 நாட்கள் அவகாசத்தை 30 நாட்களாகக் குறைக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது. அதேபோல், வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் அமெரிக்காவில் தங்கும் காலத்தை 240 நாட்களாகவும், சீனப் பத்திரிகையாளர்களுக்கு 90 நாட்களாகவும் குறைக்க முன்மொழியப்பட்டிருந்தது. இந்த நிலையில், நவம்பர் 16ஆம் தேதி இந்த வழக்கை விசாரித்த பாஸ்டன் பெடரல் நீதிமன்ற நீதிபதி டென்னிஸ் சேய்லர், டிரம்ப் நிர்வாகத்தின் இந்தத் திட்டம் சட்டத்திற்கு முரணானது எனக் கூறி ரத்து செய்துள்ளார்.