அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள 90 அடி உயர ஹனுமன் சிலையை அகற்ற வேண்டும் என பழமைவாத யூடியூபர் ஜெஸ்ஸி ஹியூஸ் தெரிவித்ததைத் தொடர்ந்து சர்ச்சை எழுந்துள்ளது. சுகர்லேண்டில் உள்ள ஸ்ரீ அஷ்டலட்சுமி கோயிலில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலை, 2024 ஆகஸ்டில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. சமூக வலைதளத்தில் சிலையின் புகைப்படத்தை வெளியிட்ட ஹியூஸ், “நாங்கள் வெற்றி பெற்றால் இதை அகற்றுவோம்” என பதிவிட்டார். இதற்கு அமெரிக்க வாழ் இந்து அமைப்புகள் மற்றும் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அமெரிக்க முன்னாள் ராணுவ வீரர் ருச்சிர் பக்ஷி, இந்த கருத்தை இந்து மதத்திற்கு எதிரான அச்சுறுத்தல் என விமர்சித்தார். வட அமெரிக்க இந்துக்கள் கூட்டமைப்பும் கண்டனம் தெரிவித்தது.