தவெக அமைச்சரவை இலாகா ஒதுக்கீடு விவகாரம்.. முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை..
Tamilaga Vettri Kazhagam Cabinet Portfolio : தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சரவை இலாகா ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வரும் நிலையில், இலாகா குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
தமிழகத்தின் புதிய முதல்வராக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய் கடந்த மே 10- ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் சேர்த்து 9 எம். எல். ஏ.க்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர். இவர்கள் பதவி ஏற்று ஒரு வாரம் ஆன நிலையில், தற்போது வரை அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதன் காரணமாக அரசு துறைகளில் பல்வேறு முக்கிய கோப்புகள் கையெழுத்து இடப்படாமல் நிலுவையில் இருந்து வருகின்றன. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சரவையே விரிவாக்கம் செய்வதற்கும், அமைச்சர்களுக்கு இலாகாக்களை ஒதுக்கீடு செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழக முதல் அமைச்சரின் தனி செயலாளரான செந்தில்குமார் இன்று சனிக்கிழமை ( மே 16- ஆம் தேதி) தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசி இருந்தார்.
தமிழக ஆளுநரிடம் தவெக அமைச்சரவை இலாகா பட்டியல் சமர்ப்பிப்பு
அப்போது, தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் இலாகாக்கள் ஒதுக்கீடு செய்வது, நிர்வாக விவகாரங்கள் ஆகியவை தொடர்பாக சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடைபெற்றது. அப்போது, தமிழக ஆளுநர் விஸ்வநாத் அர்லேகரிடம் தமிழக வெற்றிக் கழக அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் இலாகாக்கள் ஒதுக்கீடு தொடர்பான பட்டியலை முதல்வரின் தனிச்செயலாளர் செந்தில்குமார் வழங்கியதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து, நீலாங்கரையில் அமைந்துள்ள முதல்வர் ஜோசப் விஜய்யின் வீட்டிற்கு தனிச்செயலாளர் செந்தில்குமார் சென்றார்.
மேலும் படிக்க: மக்களை நிற்க வைக்கக்கூடாது.. அமரவைத்து தான் பேச வேண்டும்.. முதல்வர் விஜய்யின் அடுத்த அதிரடி!!




முதல் அமைச்சர் விஜய்யுடன் தனிச்செயலர் தீவிர ஆலோசனை
அங்கு, முதல்வருடன், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில், முதல்வரின் தனிச் செயலாளர் செந்தில்குமார் ஆளுநர் கூறிய தகவல்கள் மற்றும் ஆலோசனை ஆகியவற்றை எடுத்துரைத்ததாக தெரிகிறது. இதில், அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
விரைவில் வெளியாகிறது தவெக அமைச்சரவை இலாகா விவரம்
மேலும், அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் இலாகக்கள் ஒதுக்கீடு தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமியிடம் முதல்வர் விஜய் ஆலோசனை கேட்டுள்ளார். இந்த தீவிர ஆலோசனைக்கு பிறகு தமிழக வெற்றி கழகத்தின் அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் இலாகாக்கள் ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும், அமைச்சரவை விரிவாக்கம் அடுத்த வாரம் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: “நீட் தேர்வை முற்றாக ஒழிக்க வேண்டும்”.. தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்!!