செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்குத் தற்காலிகமாகத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரி, OpenAI, கூகுள், Anthropic உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. ChatGPT, Gemini, Claude போன்ற AI தொழில்நுட்பங்களை உருவாக்கும் நிறுவனங்களின் அதிவேக வளர்ச்சி மனித குலத்திற்குப் பேராபத்தை ஏற்படுத்தக்கூடும் எனக் கூறி, நான்கு இலாப நோக்கமற்ற அமைப்புகள் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளன. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில், OpenAI, Anthropic, கூகுள் மட்டுமின்றி, எலான் மஸ்க்கின் SpaceX நிறுவனத்தின் AI பிரிவு மற்றும் Meta நிறுவனமும் சேர்க்கப்பட்டுள்ளன. AI தொழில்நுட்பங்கள் மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறிச் செயல்படக்கூடும் என்றும், இணையதளங்கள் மற்றும் முக்கியமான கணினி கட்டமைப்புகள் மீது தானாகவே தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதாகவும் மனுதாரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், AI நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளே இந்தத் தொழில்நுட்பத்தின் எதிர்கால ஆபத்துகள் குறித்து எச்சரித்துள்ளதைத் தங்களது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர். குறிப்பாக, AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தடுக்க போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரை, புதிய AI மாடல்களை உருவாக்குவதையும் பயன்பாட்டிற்குக் கொண்டுவருவதையும் தடை செய்ய வேண்டும் என நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உடனடியாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களிலும் OpenAI நிறுவனத்திற்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில், தற்போது முன்னணி AI நிறுவனங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய இந்தப் புதிய வழக்கு தொழில்நுட்ப உலகில் கவனத்தைப் பெற்றுள்ளது.