“நீட் தேர்வை முற்றாக ஒழிக்க வேண்டும்”.. தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்!!
கடந்த மே மாதம் 3ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வில் பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்தன. இந்த முறைகேடு குற்றச்சாட்டுகளின் காரணமாக அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, மீண்டும் ஜூன் மாதம் 21-ஆம் தேதி 'மறு நீட் தேர்வு' நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வை இந்தியா முழுவதும் முற்றாக ஒழிக்க வலியுறுத்தி, திராவிடர் கழகம் (திக) சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. மாநிலத் தலைமை அளவிலான இந்தத் தொடர் போராட்டத்தின் ஒரு பகுதியாக, தலைநகர் சென்னையில் உள்ள எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்குத் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தலைமை தாங்கி, நீட் தேர்வுக்கு எதிரான கண்டன முழக்கங்களை எழுப்பினார்.
இதையும் படிக்க: மக்களை நிற்க வைக்கக்கூடாது.. அமரவைத்து தான் பேச வேண்டும்.. முதல்வர் விஜய்யின் அடுத்த அதிரடி!!
நீட் தேர்வில் நடந்த முறைகேடு:
கடந்த மே மாதம் 3ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வில் பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்தன. இந்த முறைகேடு குற்றச்சாட்டுகளின் காரணமாக அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, மீண்டும் ஜூன் மாதம் 21-ஆம் தேதி ‘மறு நீட் தேர்வு’ நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, அடுத்த ஆண்டு முதல் இந்த நீட் மூலப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும். நீட் தேர்வு, ஓஎம்ஆர் தாள்களில் நடத்துவதற்குப் பதிலாக, கணினி அடிப்படையிலான தேர்வாக நடத்தப்படும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இப்போது ஜேஇஇ மெயின் தேர்வு உள்பட பிற முக்கிய நுழைவுத் தேர்வுகள் ஆன்லைனில் நடைபெற்று வருகின்றன. அதேபோல் நீட் தேர்வையும் ஆன்லைனில் மாற்ற மத்திய அரசு முடிவெடுத்து நடவடிக்கையை தொடங்கியுள்ளது.
நீட் மறுதேர்வுக்குக் கண்டனம்:
இந்நிலையில், ஒவ்வொரு முறையும் நீட் தேர்வில் தொடரும் குளறுபடிகளையும், மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் வகையில் மீண்டும் மறுதேர்வு நடத்துவதையும் வன்மையாகக் கண்டித்துத் திராவிடர் கழகம் இந்தத் தீவிரப் போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. அந்தவகையில், சென்னையில் நடைபெற்ற இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத்தினருடன் இணைந்து, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் முக்கியத் தலைவர்களும் பெருந்திரளாகப் பங்கேற்றுத் தங்களது ஆதரவைப் பதிவு செய்தனர்.
திமுக கூட்டணி கட்சிகள் நேரில் ஆதரவு:
குறிப்பாக திமுகசார்பில் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அதன் மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.பாலாஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகளும், தொண்டர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யக் கோரி மத்திய அரசுக்கு எதிராகக் கண்டன உரையாற்றினர்.
இதையும் படிக்க: பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள் நடமாட்டம்?.. உருவாகும் ரகசிய நெட்வொர்க்.. முதல்வர் விஜய்யின் அதிரடி உத்தரவு..