பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள் நடமாட்டம்?.. உருவாகும் ரகசிய நெட்வொர்க்.. முதல்வர் விஜய்யின் அதிரடி உத்தரவு..
சுற்றறிக்கையின்படி, தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகள், FL2 மற்றும் FL3 உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் அனைத்தும் அரசு அனுமதித்துள்ள குறிப்பிட்ட நேரத்திற்குள் மட்டுமே இயங்க வேண்டும். அதன்படி, மதியம் 12:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை மட்டுமே இந்த மதுபானக் கடைகளும் பார்களும் செயல்பட வேண்டும்.
தமிழகத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள், மாணவர்கள் தங்கும் விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் போதைப்பொருள் நடமாட்டம் மற்றும் கள்ளச்சாராயப் புழக்கம் குறித்துத் தீவிரமாகக் கண்காணித்து ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் ஆணையர் சார்பாகத் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், துணை மற்றும் உதவி ஆணையர்களுக்கும் பல்வேறு முக்கிய அறிவுறுத்தல்கள் அடங்கிய அவசரச் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. இந்தச் சுற்றறிக்கையில், பள்ளி மற்றும் கல்லூரிகள் அமைந்துள்ள பகுதிகள், மாணவ-மாணவியர் தங்கிப் பயிலும் விடுதிகள் மற்றும் பேருந்து நிலையங்கள் ஆகிய மக்கள் அதிகம் கூடும் இடங்களைத் தொடர்ச்சியாகக் கண்காணிப்பது மிக அவசியம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: கோட்டையில் ‘புதிதாக’ நடக்கும் மாற்றங்கள்.. கமிஷன், கட்டிங் சிஸ்டமிற்கு முற்றுப்புள்ளி.. அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி!
ரகசிய நெட்வொர்க் அமைக்க பரிந்துரை:
இப்பகுதிகளில் கஞ்சா போன்ற இதர போதைப்பொருட்களோ அல்லது கள்ளச்சாராயமோ சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து அதிகாரிகள் தொடர் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கும் விற்பனை செய்வதற்கும் சாத்தியக்கூறுகள் உள்ள இடங்களை முன்னதாகவே கண்டறிந்து, அந்தப் பகுதிகளில் தீவிரத் தடுப்பு நடவடிக்கைகளையும் சோதனைகளையும் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதோடு, போதைப்பொருள் பழக்கத்தை கண்டறிய ரகசிய நெட்வொர்க் அமைக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் மற்றும் பார்களுக்கான நேரக் கட்டுப்பாடு:
சுற்றறிக்கையின்படி, தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகள், FL2 மற்றும் FL3 உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் அனைத்தும் அரசு அனுமதித்துள்ள குறிப்பிட்ட நேரத்திற்குள் மட்டுமே இயங்க வேண்டும். அதன்படி, மதியம் 12:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை மட்டுமே இந்த மதுபானக் கடைகளும் பார்களும் செயல்பட வேண்டும்.
அரசு நிர்ணயித்துள்ள இந்த நேரத்தைத் தாண்டி, மற்ற நேரங்களில் எக்காரணத்தைக் கொண்டும் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெறக் கூடாது. இதனைத் தடுப்பதற்கான முழுமையான கண்காணிப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகங்கள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எம்ஆர்பி விலையைத் தாண்டினால் நடவடிக்கை:
இது தவிர, டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளில் மதுபானங்களின் மீது அச்சிடப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட, கூடுதலாகப் பணம் வசூலித்து விற்பனை செய்யக் கூடாது. கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதைத் தடுப்பதற்கான தகுந்த நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும். இந்த உத்தரவுகள் அனைத்தும் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்ய, சம்பந்தப்பட்ட துறை சார்ந்த உயர் அதிகாரிகள் அவ்வப்போது மதுக்கடைகள் மற்றும் பார்களில் திடீர் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று சுற்றறிக்கையில் மிகத் திட்டவட்டமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: தவெக அரசு அமைந்து 7 நாட்கள்.. ஒதுக்கப்படாத இலாகாக்கள்.. கோட்டையில் தேங்கும் முக்கிய கோப்புகள்!!