தவெக அரசு அமைந்து 7 நாட்கள்.. ஒதுக்கப்படாத இலாகாக்கள்.. கோட்டையில் தேங்கும் முக்கிய கோப்புகள்!!
புதிய ஆட்சிப் பொறுப்பேற்று ஒரு வாரம் ஆகப்போகும் சூழலிலும், இதுவரை எந்தெந்த அமைச்சருக்கு என்னென்ன துறைகள் என்பது ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அதேபோல் அமைச்சரவை விரிவாக்கம் குறித்தும் புதிய தவெக அரசு இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடாமல் மௌனம் காத்து வருகிறது.
தமிழகத்தில் புதிய அரசு அமைந்து நாளையுடன் (மே 17) ஒரு வாரம் நிறைவடைய உள்ள நிலையிலும், அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு மற்றும் அமைச்சரவை விரிவாக்கத்தில் தொடர்ந்து பெரும் இழுபறியும் குழப்பமும் நீடித்து வருகிறது. இதனால் புதிய அரசின் மக்கள் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகப் பரவலாகக் கருத்துக்கள் எழுந்துள்ளன. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் எந்தவொரு தனித்த கட்சிக்கும் முழுமையான பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட நீண்ட அரசியல் இழுபறிக்குப் பின்னர், திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் வெளியிலிருந்து தரும் ஆதரவின் தயவோடு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதையும் படிக்க: நீலாங்கரை டூ தலைமைச் செயலகம்.. 17 கிலோமீட்டர்… 400 போலீசார்… முதல்வர் விஜய்யின் ‘பவர்ஃபுல்’ கான்வாய் பயணம்!
அமைச்சர்களுக்கு இலாக்கா ஒதுக்கப்படவில்லை:
அவருடன் சேர்த்து மொத்தம் 9 அமைச்சர்களும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். புதிய ஆட்சிப் பொறுப்பேற்று ஒரு வாரம் ஆகப்போகும் சூழலிலும், இதுவரை எந்தெந்த அமைச்சருக்கு என்னென்ன துறைகள் என்பது ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அதேபோல் அமைச்சரவை விரிவாக்கம் குறித்தும் புதிய தவெக அரசு இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடாமல் மௌனம் காத்து வருகிறது. இந்தத் துறை ஒதுக்கீடு மற்றும் அமைச்சரவை விரிவாக்க தாமதத்திற்குப் பின்னணியில் பல்வேறு அரசியல் காரணங்கள் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமைச்சரவையில் இடம் பிடிக்கப் போட்டி:
திமுக கூட்டணிக் கட்சிகள் தவெக அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவளித்து வரும் நிலையில், திமுகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு வந்த காங்கிரஸ் கட்சி, தங்களுக்கு புதிய அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று பலத்த எதிர்பார்ப்போடு காத்துக் கொண்டிருக்கிறது. சட்டமன்றத்தில் நடைபெற்ற தவெக அரசின் பெரும்பான்மை நிரூபிக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, கொறடா உத்தரவை மீறி அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுகவின் சி.வி.சண்முகம் – எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அணியும் தவெக அமைச்சரவையில் பங்கேற்கும் தீவிர எண்ணத்தில் காய்களை நகர்த்தி வருகிறது. இப்படிப் பல்வேறு தரப்பிலிருந்தும் அமைச்சரவையில் இடம் பிடிக்கக் கொடுக்கப்படும் அழுத்தங்களின் காரணமாகவே இந்த இழுபறி நீடித்து வருவதாகக் கூறப்படுகிறது
தொடரும் முதலமைச்சரின் பணி:
எனினும், முதலமைச்சரின் விஜய் தினமும் காலை 10 மணிக்கு தலைமைச்செயலகத்திற்கு வந்துவிடுகிறார். மாலை வரை தலைமைச்செயலகத்தில் இருந்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அப்போது அரசின் முக்கிய மக்கள் நலத்திட்டங்கள் பற்றி ஆய்வு செய்கிறார். முக்கிய தொழிலதிபர்கள், பலதரப்பட்ட பிரமுகர்களுக்கு நேரம் ஒதுக்கி அவர்களை சந்தித்து வருகிறார். முக்கிய மக்கள் நலத் திட்டங்களான உயர் கல்வி உதவித்தொகை, மகளிர் உரிமைத்தொகை ஆகியவற்றை வழங்குவதில் அரசு சுணக்கம் காட்டவில்லை. ஆனால் சில திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. அதற்கு அமைச்சர் நியமிக்கப்படவில்லை என்ற காரணம் காட்டப்படுகிறது.
இதையும் படிக்க: 25 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி ஆளுநரை நேரில் சந்தித்து முறையிட முடிவு.. இபிஎஸ் தீவிர ஆலோசனை!!
காத்திருக்கும் கோப்புகள்:
கடந்த ஆட்சியில் தொடங்கியிருந்த சாலைகள் அமைப்பது, பழுது பார்ப்பது உள்ளிட்ட பல திட்டங்களுக்கு நிதி விடுவிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. பொதுவாக இந்தப் பணிகளுக்காக டெண்டர் விட்டு, நிதி மற்றும் நிர்வாக அனுமதியை பெற வேண்டும். அதற்கு துறை அமைச்சர்களின் ஒப்புதல் அவசியம். அதோடு, அரசின் முக்கிய கொள்கை முடிவுகள் அமைச்சரவை கூட்டத்தில்தான் எடுக்கப்படும். அதன் பின்னர் அதற்கான திட்டங்கள் தீட்டப்படும். ஆனால் அமைச்சர்கள் முழு அளவில் இன்னும் நியமிக்கப்படவில்லை என்பதாலும் துறைகள் ஒதுக்கப்படவில்லை என்பதாலும் அதற்கான திட்டங்களின் கோப்புகள், அமைச்சரின் கையெழுத்துக்காக காத்துக்கிடக்கின்றன என்று தலைமைச் செயலக வட்டாரத்தில் கூறப்படுகிறது. இன்னும் 4 நாட்களுக்குள் அமைச்சரவை முழுமையாக அமைக்கப்படும் என்று அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.