நீலாங்கரை டூ தலைமைச் செயலகம்.. 17 கிலோமீட்டர்… 400 போலீசார்… முதல்வர் விஜய்யின் ‘பவர்ஃபுல்’ கான்வாய் பயணம்!
முதல்வர் ஜோசப் விஜய்க்கும் முந்தைய ஆட்சியில் கடைபிடிக்கப்பட்ட 'டனலிங்' நடைமுறையே பின்பற்றப்படுகிறது நீலாங்கரையில் இருந்து அவர் தினமும் அலுவலகம் வர 25 நிமிடங்கள் ஆவதால், அந்த வழித்தடங்களில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் மற்றும் போலீசாருக்குப் பணிச்சுமை ஏற்படுவதாகச் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் எழுந்துள்ளன.
தமிழக முதல்வர்கள் பொது இடங்களுக்குச் செல்லும் போது வழங்கப்படும் பாதுகாப்பு மற்றும் அவர்களின் வாகன அணிவகுப்பு (கான்வாய்) முறைகள் காலத்திற்கு ஏற்ப பல்வேறு மாற்றங்களைச் சந்தித்துள்ளன. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல் தற்போதைய முதல்வர் விஜய் வரை கடைபிடிக்கப்படும் கான்வாய் நடைமுறைகள் குறித்த சுவாரசியமான தகவல்களை இக்கட்டுரையில் விரிவாக பார்க்கலாம். பொதுவாக ஒரு முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் 12 முதல் 14 வாகனங்கள் இடம்பெறும். இதில் குண்டு துளைக்காத வாகனங்கள், ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்ட கார்கள், கேமரா வாகனங்கள் மற்றும் ஆயுதம் ஏந்திய கமாண்டோக்களின் வாகனங்கள் அடங்கும். சுமார் 55 உயர் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட NSG கமாண்டோக்கள் இந்த அணியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
இதையும் படிக்க: 1.31 கோடி மகளிர்களுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை… வங்கி கணக்கில் வரவு வைப்பு!
ஜெயலலிதா காலம்: ‘ஜீரோ டிராபிக்’ சகாப்தம்:
மறைந்த முதல்வர் ஜெயலலிதா காலத்தில் ‘ஜீரோ டிராபிக்’ முறை மிகவும் தீவிரமாகக் கடைபிடிக்கப்பட்டது. அவர் செல்லும் வழித்தடங்களில் ஒரு மணி நேரத்திற்கு முன்பே பொதுப் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்படும். பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக A, B, C என மூன்று மாற்று வழித்தடங்கள் (Routes) தயார் நிலையில் இருக்கும். இதற்காக சுமார் 400 முதல் 500 போலீசார் 4 மணி நேரத்திற்கு முன்பே பணியில் இறக்கப்படுவார்கள்.
இபிஎஸ்: நிம்மதிப் பெருமூச்சு:
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காலத்தில் பொதுமக்களுக்கு இடையூறு தரும் ‘ஜீரோ டிராபிக்’ முறை தவிர்க்கப்பட்டது. காண்வாய் வருவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாகச் சிக்னல்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, அணிவகுப்பு சென்ற 4 நிமிடங்களிலேயே மீண்டும் அனுமதிக்கப்பட்டது. இது பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் பெரும் நிம்மதியை அளித்தது.
மு.க.ஸ்டாலின்: ‘டனலிங்’ முறை:
முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் காலத்தில், ஆரம்பத்தில் சில நாட்கள் ஜீரோ டிராபிக் முறை இருந்தாலும், பின் விமர்சனங்கள் எழுந்ததால் ‘டனலிங்’ (Tunneling) முறை அறிமுகமானது. அதாவது, சாலைகளின் ஒரு பகுதியில் கூம்புகள் (Cones) வைக்கப்பட்டு காண்வாய் செல்லும்; மற்றொரு பகுதியில் பொதுப் போக்குவரத்து அனுமதிக்கப்படும். இதற்காகச் சுமார் 300 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
முதல்வர் விஜய்: நீலாங்கரை டூ தலைமைச் செயலகம்:
தற்போதைய முதல்வர் ஜோசப் விஜய்க்கும் முந்தைய ஆட்சியில் கடைபிடிக்கப்பட்ட ‘டனலிங்’ நடைமுறையே பின்பற்றப்படுகிறது. நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து தலைமைச் செயலகம் வரை உள்ள 17 கி.மீ தூரத்திற்குச் சுமார் 400 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். நீலாங்கரையில் இருந்து அவர் தினமும் அலுவலகம் வர 25 நிமிடங்கள் ஆவதால், அந்த வழித்தடங்களில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் மற்றும் போலீசாருக்குப் பணிச்சுமை ஏற்படுவதாகச் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் எழுந்துள்ளன.
எழும் கோரிக்கைகள்:
மக்களுக்கும் காவல் துறையினருக்கும் ஏற்படும் இந்த நெருக்கடியைக் குறைக்க, முதல்வர் விஜய் தனது இல்லத்தை நீலாங்கரையில் இருந்து சென்னை நகரின் மையப்பகுதியான பட்டினம்பாக்கம் அலுவலகம் அல்லது அரசு மாளிகைக்கு மாற்றினால் நலமாக இருக்கும் எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றன.
இதையும் படிக்க: எரிபொருள் விலை உயர்வு.. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம்.. லாரி உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை!!