எரிபொருள் விலை உயர்வு.. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம்.. லாரி உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை!!
Petrol, Diesel Prices Hike: டீசல் விலை உயர்வு என்பது வெறும் லாரிகளுடன் நின்றுவிடுவதில்லை. காய்கறிகள், பால் மற்றும் மளிகைப் பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் லாரிகள் மூலமே ஏற்றி வரப்படுவதால், அவற்றின் விலையும் சந்தையில் உயரக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. இது சாமானிய மக்களின் மாதந்திர பட்ஜெட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
சர்வதேச சந்தையில் நிலவும் போர் பதற்றம் மற்றும் பொருளாதார மாற்றங்கள் காரணமாக, இந்தியாவில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் இன்று அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளன. இந்தத் திடீர் விலை உயர்வு சாமானிய மக்கள் மற்றும் போக்குவரத்துத் துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விலை உயர்வு நிலவரத்தின் படி, சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ₹3.10 உயர்த்தப்பட்டு, ஒரு லிட்டர் ₹103.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் லிட்டருக்கு ₹3.00 உயர்த்தப்பட்டு, ஒரு லிட்டர் ₹95.47-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க: நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக உயர்வு!!
விலை உயர்வுக்கான காரணங்கள்:
மேற்காசிய நாடுகளில், குறிப்பாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவும் போர்ச் சூழலால் கச்சா எண்ணெய் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததே இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. முன்னதாக, அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், எரிபொருள் சிக்கனத்தின் அவசியத்தை வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் குமுறல்:
இந்த திடீர் விலை உயர்வு குறித்து லாரி உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த யுவராஜ் கூறுகையில், இந்த அறிவிப்பு தங்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளதாகவும், டீசல் விலை உயர்வு போக்குவரத்துத் துறையை நிலைகுலையச் செய்யும் என்று தெரிவித்தார். ஒரு லாரியின் மொத்த வாடகையில் 50% முதல் 60% வரை டீசலுக்காகவே செலவிடப்படுகிறது. தற்போது லிட்டருக்கு ₹3 உயர்த்தப்பட்டுள்ளதால், லாரி உரிமையாளர்களுக்குக் கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளதுடன், பெரும் நஷ்டத்தையும் ஏற்படுத்தும்.
லாரிகள் ஏற்கனவே ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு விடப்பட்டுள்ளதால், உடனடியாக வாடிக்கையாளர்களிடம் கூடுதல் வாடகையைக் கேட்க முடியாது. இது சிறு குறு லாரி உரிமையாளர்களைக் கடுமையாகப் பாதிக்கும். எரிபொருள் விலை உயர்வு ஒருபுறம் இருக்க, டயர்கள் மற்றும் இதர வாகன உதிரிபாகங்களின் விலையும் ஏற்கனவே உயர்ந்துவிட்டதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு:
டீசல் விலை உயர்வு என்பது வெறும் லாரிகளுடன் நின்றுவிடுவதில்லை. காய்கறிகள், பால் மற்றும் மளிகைப் பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் லாரிகள் மூலமே ஏற்றி வரப்படுவதால், அவற்றின் விலையும் சந்தையில் உயரக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. இது சாமானிய மக்களின் மாதந்திர பட்ஜெட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
போராட்ட அறிவிப்பு மற்றும் கோரிக்கைகள்:
எண்ணெய் நிறுவனங்களின் இந்த விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளன. மீனவர்களுக்கு வழங்கப்படுவது போல, பொதுப் போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்துத் துறையினருக்கு மானிய விலையில் டீசல் வழங்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிக்க : தங்கம் வாங்க வேண்டாம்.. நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை.. காரணம் என்ன?
அதோடு, இந்த விலை உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி, ஜூன் மாதத்தில் அகில இந்திய அளவில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்த அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் சங்கங்கள் மற்றும் மாநில லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் ஆலோசித்து வருகின்றன.