AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

25 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி ஆளுநரை நேரில் சந்தித்து முறையிட முடிவு.. இபிஎஸ் தீவிர ஆலோசனை!!

இந்தச் சூழ்நிலையில், சென்னை அடையாறு பசுமை வழிச்சாலையில் உள்ள தனது இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி நேற்று அவசர ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார். இதில் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் மற்றும் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

25 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி ஆளுநரை நேரில் சந்தித்து முறையிட முடிவு.. இபிஎஸ் தீவிர ஆலோசனை!!
எடப்பாடி பழனிசாமி - சி.வி.சண்முகம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 16 May 2026 06:47 AM IST

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, அதிமுகவில் தலைமைத்துவப் போட்டி தீவிரமடைந்தது. இதன் தொடர்ச்சியாக கட்சி அதிகாரப்பூர்வமாக இரண்டு அணிகளாகப் பிரிந்து செயல்படத் தொடங்கியுள்ளது. ஒரு அணியினர் அதிமுகவின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி தலைமையின் கீழ் அணிவகுத்து நிற்கின்றனர். மற்றொரு அணியினர் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் தனி அணியாகத் திரண்டு தங்களது செயல்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதையும் படிக்க: யூடியூப் சேனலை உருவாக்குவது எப்படி? தமிழக அரசின் புதிய பயிற்சி திட்டம் – எப்படி விண்ணப்பிப்பது?

சட்டமன்ற வாக்கெடுப்பும் உட்கட்சிப் பூசலும்:

சமீபத்தில் சட்டமன்றத்தில் தவெக அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியது. இந்த வாக்கெடுப்பில் அதிமுக அரசை எதிர்த்து வாக்களிக்கும் என்று எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். ஆனால், அவரது உத்தரவை மீறி எஸ்.பி.வேலுமணி தலைமையிலான 25 எம்எல்ஏக்கள் தவெக அரசிற்கு ஆதரவாக தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர்.

பதவிப் பறிப்பும் புதிய நியமனங்களும்:

இதைத்தொடர்ந்து, கட்சியின் கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டதாகக் கூறி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் உள்ளிட்ட அந்த 25 எம்.எல்.ஏ.க்களின் கட்சிப் பதவிகளை எடப்பாடி பழனிசாமி அதிரடியாகப் பறித்தார். மேலும், அவர்களுக்குப் பதிலாகப் புதிதாக 26 மாவட்டச் செயலாளர்களை நியமித்து உத்தரவிட்டார்.

அதிருப்தி அணியின் பதிலடி:

எடப்பாடி பழனிசாமியின் இந்த நடவடிக்கைக்குப் பதில் அளிக்கும் விதமாக, “எங்களை யாரும் கட்சியில் இருந்து நீக்க முடியாது” என்று சி.வி.சண்முகம் தரப்பினர் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். அதோடு, உடனடியாக அதிமுக. பொதுக்குழுவைக் கூட்டி, தேர்தல் தோல்விக்கான உண்மையான காரணங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எஸ்.பி.வேலுமணி தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த அதிரடி திருப்பங்களுக்கு இடையே, இரு தரப்பினரும் அடுத்தடுத்து சபாநாயகர் ஜே.டி.பிரபாகரை நேரில் சந்தித்து தங்களது மனுக்களை அளித்துள்ளனர்.

தொடரும் மோதலும் அவசர ஆலோசனையும்:

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இந்த இரு தரப்பிற்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. கொறடா உத்தரவை மீறி அரசுக்கு ஆதரவாக வாக்களித்த 25 எம்எல்ஏக்களையும் கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆளுநரிடம் ஏற்கனவே மனு அளித்துள்ளது.

இந்தச் சூழ்நிலையில், சென்னை அடையாறு பசுமை வழிச்சாலையில் உள்ள தனது இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி நேற்று அவசர ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார். இதில் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் மற்றும் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

அடுத்தகட்ட நடவடிக்கைகள்:

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன. தற்போது கேரளா சென்றுள்ள ஆளுநர் அர்லேகர் சென்னை திரும்பியதும், அவரை எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் நேரில் சந்தித்து 25 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் குறித்து வலியுறுத்துவது என முடிவு செய்யப்பட்டது. புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தங்களது மாவட்டங்களில் கட்சிப் பணிகளை எவ்விதத் தொய்வும் இன்றி விறுவிறுப்பாக மேற்கொள்ள வேண்டும் என்றும், தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்த கள நிலவரத்தை முழுமையாக ஆராய வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

இதையும் படிக்க : தேர்தல் தோல்வி எதிரொலி.. திமுக மா.செ கூட்டத்தில் ஸ்டாலின் கடும் அதிருப்தி.. நிர்வாகிகள் அதிரடி மாற்றம்?

அதே நேரத்தில், எடப்பாடி பழனிசாமி தரப்பின் வியூகங்களை எதிர்கொள்வது குறித்து, எஸ்.பி.வேலுமணி தரப்பினரும் சென்னை எம்.ஆர்.சி.நகரில் உள்ள சி.வி.சண்முகம் அலுவலகத்தில் தங்களது ஆதரவாளர்களுடன் திரண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர்.

Follow Us