தேர்தல் தோல்வி எதிரொலி.. திமுக மா.செ கூட்டத்தில் ஸ்டாலின் கடும் அதிருப்தி.. நிர்வாகிகள் அதிரடி மாற்றம்?
சுமார் 15 முன்னாள் அமைச்சர்கள் இந்தத் தேர்தலில் தோல்வியைத் தழுவியுள்ளனர். குறிப்பாக ஆவடி நாசர் போன்ற முக்கியத் தலைவர்களின் தோல்வி தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஓசூர், கன்னியாகுமரி, திருப்பூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய நான்கு மாநகராட்சி மேயர்களுக்கு சீட் வழங்கப்பட்டும், அவர்கள் அனைவரும் தோல்வியடைந்துள்ளனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த எதிர்பாராத தோல்வியைத் தொடர்ந்து, அக்கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் தோல்விக்கான காரணங்கள் குறித்து ஆராய மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தோல்விக்குக் காரணமான நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: தமிழகத் தேர்தலில் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றவர்கள் வாக்களிப்பு.. சென்னை விமான நிலையத்தில் சிக்கிய 3 பேர் கைது!!
முக்கிய மாவட்டங்களில் ஒரு இடம் கூட இல்லை:
திமுக வரலாற்றிலேயே சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில் இந்த அளவுக்குப் பின்னடைவைச் சந்தித்ததில்லை என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். சுமார் 10 மாவட்டங்களில் திமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
சென்னை (கொளத்தூர்): ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் கூட வெற்றி பெற முடியாத சூழல் ஏற்பட்டது குறித்து மாவட்ட செயலாளர் சேகர் பாபுவிடம் விளக்கம் கேட்கப்பட்டதாகத் தெரிகிறது.
பின்னடைவு கண்ட மாவட்டங்கள்: செங்கல்பட்டு, தர்மபுரி (5), ஈரோடு (8), காஞ்சிபுரம் (4), நாமக்கல் (6), ராணிப்பேட்டை (4), சேலம் (11), திருவள்ளூர் (10), வேலூர் (5), சிவகங்கை (4) ஆகிய மாவட்டங்களில் திமுக ஒரு இடத்தைக் கூடப் பெறவில்லை.
அமைச்சர்கள் மற்றும் மேயர்களின் தோல்வி:
சுமார் 15 முன்னாள் அமைச்சர்கள் இந்தத் தேர்தலில் தோல்வியைத் தழுவியுள்ளனர். குறிப்பாக ஆவடி நாசர் போன்ற முக்கியத் தலைவர்களின் தோல்வி தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஓசூர், கன்னியாகுமரி, திருப்பூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய நான்கு மாநகராட்சி மேயர்களுக்கு சீட் வழங்கப்பட்டும், அவர்கள் அனைவரும் தோல்வியடைந்துள்ளனர். “மேயராக இருந்த உங்கள் பகுதியிலேயே உங்களுக்குச் செல்வாக்கு இல்லை என்றால், மக்கள் பணி எப்படி இருந்திருக்கும்?” என ஸ்டாலின் கடுமையாகக் கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுகிறது.
வாக்குகள் வராதது ஏன்?
மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் 1.30 கோடி மகளிர் பயனடைந்தும், அவர்களின் வாக்குகள் ஏன் திமுகவுக்கு விழவில்லை? இளைஞர்கள் ஏன் திமுகவை ஆதரிக்கவில்லை? போன்ற கேள்விகளை முன்வைத்து ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.
களையெடுப்பு மற்றும் புதிய நியமனங்கள்:
தேர்தல் பணியில் சுணக்கம் காட்டியவர்கள், உட்கட்சிப் பூசலில் ஈடுபட்டவர்கள் மற்றும் எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கு மறைமுகமாக வேலை செய்தவர்கள் குறித்த விவரங்கள் அடங்கிய பட்டியலுடன் ஸ்டாலின் கூட்டத்தில் கலந்துகொண்டார். இதனால் விரைவில் மாவட்ட செயலாளர்கள் மட்டத்தில் பெரும் ‘களையெடுப்பு’ இருக்கும் என்றும், மூத்தவர்களுக்குப் பதில் புதியவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: ரூ.1,000 உதவித்தொகை வங்கிக் கணக்கில் வரவு.. அசுர வேகத்தில் நிதியை விடுவித்த முதல்வர் விஜய்!!
கூட்டணி குறித்த அதிருப்தி:
காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் குறித்து ஏற்கனவே எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டிருந்தது. “காங்கிரஸ் முதுகில் குத்திவிட்டது” என்ற விமர்சனங்கள் எழுந்த நிலையில், வரும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகும் வகையில் புதிய யுக்திகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்குக் கட்சியில் கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படுமா என்பதும் தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.