ரூ.1,000 உதவித்தொகை வங்கிக் கணக்கில் வரவு.. அசுர வேகத்தில் நிதியை விடுவித்த முதல்வர் விஜய்!!
தவெக தனது தேர்தல் அறிக்கையில் மகளிர் உரிமைத் தொகையை ₹2,500 ஆக உயர்த்தி வழங்குவதாக உறுதியளித்திருந்தது. இது குறித்து நிதித்துறைச் செயலாளர் சித்திக் உள்ளிட்ட அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் இன்று ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அதில், தமிழகத்தின் தற்போதைய நிதி நிலைமை என்ன? நிதி ஆதாரங்களை பெருக்குவது எவ்வாறு? என ஆலோசிக்கப்படுகிறது.
சென்னை, மே 14: தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், மாணவர்களுக்கான மாத உதவித்தொகைத் திட்டம் தடையின்றித் தொடர்கிறது. முந்தைய அரசால் கொண்டுவரப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள் மாற்றமின்றி செயல்படுத்தப்படும் என்ற முதல்வரின் உறுதிமொழியைத் தொடர்ந்து, இன்று கல்லூரி மாணவர்களுக்கான ₹1,000 உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கான ‘புதுமைப் பெண்’ திட்டம் மற்றும் மாணவர்களுக்கான ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் ஆகியவற்றின் கீழ் மாதம் ₹1,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க: அரசியல் ரீதியாக பதிவிடும் எக்ஸ் கணக்குகள் முடக்கம் – தமிழக அரசின் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை
10 லட்சம் பயனாளிகள் பலன்:
இந்தத் திட்டங்களின் கீழ் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகள் உள்ளனர். இந்தநிலையில், தமிழகத்தில் ஆட்சி மாறியுள்ள சூழலில், இந்த மாதம் உதவித் தொகை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், முதல்வர் விஜய்யின் உத்தரவின்படி, நிதித்துறை சார்பில் நிதி விடுவிக்கப்பட்டு, மாணவர்களின் வங்கி கணக்கில் ₹1,000 வரவு வைக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் முதல்வர் அளித்த உறுதி:
முன்னதாக, நேற்றைய தினம் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பின்னர் பேசிய முதல்வர் விஜய், “ஆதரிப்பவர்களுக்கு மட்டுமான அரசல்ல இது; எதிர்ப்பவர்களுக்கான அரசும் கூட” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தார். மேலும், முந்தைய அரசுகளால் கொண்டுவரப்பட்ட முக்கியமான மற்றும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் அனைத்தும் தொய்வின்றித் தொடரும் என்று உறுதியளித்திருந்தார். அதன் முதற்கட்டமாகவே இந்த நிதி விடுவிப்பு பார்க்கப்படுகிறது.
மகளிர் உரிமைத் தொகை நிலவரம்:
அதேபோல், தமிழகத்தின் சுமார் 1.30 கோடி மகளிர் பயன்பெறும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ₹1,000 தொகையும் இன்றும், நாளைக்குள்ளும் பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் எனத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக மாதம் ₹1,300 கோடி செலவிடப்படுகிறது.
நிதி நிலை குறித்து முதல்வர் ஆய்வு:
தவெக தனது தேர்தல் அறிக்கையில் மகளிர் உரிமைத் தொகையை ₹2,500 ஆக உயர்த்தி வழங்குவதாக உறுதியளித்திருந்தது. இது குறித்து நிதித்துறைச் செயலாளர் சித்திக் உள்ளிட்ட அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் இன்று ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தமிழகத்தின் தற்போதைய நிதி நிலைமை என்ன? நிதி ஆதாரங்களை பெருக்குவது எவ்வாறு?
இதையும் படிக்க: தமிழகத் தேர்தலில் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றவர்கள் வாக்களிப்பு.. சென்னை விமான நிலையத்தில் சிக்கிய 3 பேர் கைது!!
தேர்தல் வாக்குறுதிகளை எப்போது அமல்படுத்துவது? ஆகியவை குறித்து இந்த ஆய்வுக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. மேலும், பொருளாதார வல்லுநர்கள் குழு மற்றும் திட்டக்குழுவில் மாற்றம் செய்யப்படுமா என்பது குறித்தும் முதல்வர் ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது. ஆட்சி மாறினாலும் மக்கள் நலத் திட்டங்கள் தடையின்றித் தொடர்வது மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.