“ஆதாரம் என்கிட்ட இருக்கு!”.. பேரவையில் புள்ளிவிவரங்களுடன் பாய்ந்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா.. திமுக-வினருடன் கடும் வாக்குவாதம்!
Aadhav Arjuna Assembly Speech: தமிழ்நாடு சட்டமன்றத்தில் போதைப்பொருள் புழக்கம் மற்றும் போக்சோ வழக்குகள் உயர்வு குறித்து காவல்துறை அறிக்கைகள் மற்றும் எஃப்.ஐ.ஆர் நகல்களை ஆதாரமாகக் காட்டி அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆக்ரோஷமாக உரையாற்றினார். திமுக ஆட்சியில் தான் போதை கலாச்சாரம் அதிகரித்தது என அவர் சாடியதால் பேரவையில் திமுக உறுப்பினர்களுடன் கடும் வாக்குவாதம் வெடித்தது.
சென்னை, ஆகஸ்ட் 17: தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் மாநிலத்தின் சட்டஒழுங்கு நிலைமை மற்றும் போதைப்பொருள் புழக்கம் குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது அவையில் கடுமையான விவாதம் நடைபெற்றது. அப்போது உரையாற்றிய பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில் போதைப்பொருள் கலாச்சாரம் கட்டுக்கடங்காமல் அதிகரித்ததாகவும், அதன் விளைவாக குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளும் போக்சோ வழக்குகளும் பெருமளவில் உயர்ந்துள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் மற்றும் எஃப்.ஐ.ஆர் நகல்களை ஆதாரமாகக் காட்டி ஆக்ரோஷமாகப் பேசினார்.
இதையும் படிக்க: ஐபிஎல் ஸ்டேடியத்தில் போதைப்பொருளா?.. பேரவையில் உதயநிதி vs அமைச்சர் சரத் கடும் மோதல்..
பாலியல் வன்கொடுமை வழக்கில் திமுக நிர்வாகி:
அவையில் காவல்துறை அறிக்கைகளை மேற்கோள் காட்டிப் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, 2020-ஆம் ஆண்டில் 4,338 ஆக இருந்த போக்சோ வழக்குகள், 2021-இல் 6,064 ஆகவும், 2022-இல் 6,580 ஆகவும் உயர்ந்து, 2023-2024 காலக்கட்டத்தில் 10,000-க்கும் மேலாக 40% வரை அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டினார். மேலும், இரண்டரை வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய திமுக நிர்வாகி மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டதையும், மக்கள் எதிர்ப்பிற்குப் பிறகே நடவடிக்கை எடுக்கப்பட்டதையும் குறிப்பிட்டு, அன்றைய துணை முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலினை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
பயம் உள்ளவர்கள் தான் கத்துவார்கள்:
அமைச்சரின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு திமுக உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டதால் அவையில் பெரும் அமளி ஏற்பட்டது. அதற்குப் பதிலளித்த அமைச்சர், “உண்மை இருந்தால் அமைதியாக இருக்க வேண்டும்; பயம் உள்ளவர்கள் தான் கத்துவார்கள். இந்த ஆதாரங்கள் எல்லாம் தமிழக வெற்றி கழகத்தின் அறிக்கை அல்ல, அன்றைய திமுக அரசின் காவல்துறையும் டிஜிபியும் கொடுத்த அதிகாரப்பூர்வ அறிக்கைகள்” என்று ஆவேசமாகத் தெரிவித்தார். மேலும் தற்போதைய தவெக ஆட்சியில் போதைப்பொருள் ஒழிப்பிற்காக சிறப்புப் படை அமைக்கப்பட்டு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக உறுதியளித்தார்.
குறுக்கிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள்:
விவாதத்தின் இடைவெளியில் குறுக்கிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள், கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது அரசின் விளக்கத்தை மட்டுமே அளிக்க வேண்டுமே தவிர, எதிர்க்கட்சிகள் மீது பதில் குற்றச்சாட்டுகளை அடுக்கக் கூடாது என சட்டமன்ற விதிகளைச் சுட்டிக்காட்டினர். இருப்பினும், எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பும் பரவலான குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் கூட்டுக் பொறுப்பு அமைச்சர்களுக்கு உண்டு எனக் கூறி, விதி 55-ன் கீழ் அமைச்சரின் விளக்க உரையைத் தொடர சபாநாயகர் அனுமதி அளித்தார்.
இதையும் படிக்க: “100 நாள் சாதனை எனப் பெருமை பேசுவது வேடிக்கை!”.. சட்டப்பேரவையில் சட்டம்-ஒழுங்கு குறித்து உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்!!
இறுதியில், “தமிழ்நாட்டில் போதைப்பழக்கத்திற்கு அடித்தளமிட்டதே திமுக அரசுதான், அதனால் தான் மக்கள் அவர்களைத் தூக்கி எறிந்தார்கள். எங்கள் ஆட்சியில் எவ்வித அரசியல் தலையீடும் இன்றி குற்றவாளிகள் மீது கடுமையான கைது நடவடிக்கை எடுக்கப்படும்” என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறுதியளித்தார்.