தமிழகத் தேர்தலில் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றவர்கள் வாக்களிப்பு.. சென்னை விமான நிலையத்தில் சிக்கிய 3 பேர் கைது!!
பெரம்பூர் தொகுதியில் வாக்களித்த பாலசந்திரன் என்பவரும் அதிகாரிகளால் பிடிக்கப்பட்டுள்ளார். இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், கடந்த 45 ஆண்டுகளாகத் தமிழகத்திலேயே வசித்து வருகிறார். இருப்பினும், முறையான இந்தியக் குடியுரிமை பெறாத நிலையில் இவர் வாக்களித்ததற்காகக் கைது செய்யப்பட்டு, கொடுங்கையூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் முடிவுகள் மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றவர்கள் சட்டவிரோதமாக வாக்களித்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றியது. ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை விட இது குறைவாக இருந்த போதிலும், திமுக கூட்டணியில் இருந்த சில கட்சிகள் மற்றும் அதிமுகவில் ஏற்பட்ட பிளவு காரணமாக தவெகவுக்கு ஆதரவு பெருகியது. இதனைத் தொடர்ந்து, மே 13ஆம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டிருந்தார். நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 144 எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவாகவும், 22 பேர் எதிராகவும், 5 பேர் நடுநிலையாகவும் வாக்களித்தனர். திமுக எம்எல்ஏக்கள் சபையிலிருந்து வெளிநடப்பு செய்த நிலையில், விஜய் தலைமையிலான அரசு தனது பெரும்பான்மையை வெற்றிகரமாக நிரூபித்தது.
இதையும் படிக்க: அரசியல் ரீதியாக பதிவிடும் எக்ஸ் கணக்குகள் முடக்கம் – தமிழக அரசின் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை
வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றவர்கள் கைது:
தேர்தல் முடிந்து பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வரும் வேளையில், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் குடியேற்றத் துறை (Immigration) அதிகாரிகள் நடத்திய சோதனையில் மூன்று பேர் சிக்கினர். இவர்கள் அனைவரும் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றவர்கள் என்பதுடன், நடந்து முடிந்த தமிழகத் தேர்தலில் சட்டவிரோதமாக வாக்களித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
வாக்களித்தது எப்படி?:
சென்னை அசோக் நகர் பகுதியைச் சேர்ந்த ஜிதேந்திரநாத் என்பவர், கனடாவில் மென்பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2022-ஆம் ஆண்டே கனடா நாட்டின் குடியுரிமையைப் பெற்றுவிட்டார். உறவினர் திருமணத்திற்காகத் தமிழகம் வந்திருந்த இவரது பெயர், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாமல் இருந்துள்ளது. இதனைப் பயன்படுத்தி, அசோக் நகரில் உள்ள நிர்மலா மேல்நிலைப் பள்ளியில் அவர் தனது வாக்கினைப் பதிவு செய்துள்ளார். நேற்று வெளிநாடு செல்வதற்காகச் சென்னை விமான நிலையம் வந்தபோது, அவரது கையில் இருந்த தேர்தல் மையைக் கண்டு அதிகாரிகள் சந்தேகித்தனர். விசாரணையில் அவர் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றவர் என்பது உறுதியானதை அடுத்து, அவர் கே.கே.நகர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
ஆஸ்திரேலியக் குடியுரிமை பெற்றவர் பிடிபட்டார்:
இதேபோல, விருகம்பாக்கத்தைச் சேர்ந்த சந்திரசேகர ரகுபதி என்பவரும் அதிகாரிகளிடம் சிக்கினார். இவர் ஆஸ்திரேலியக் குடியுரிமை பெற்றவர் என்பது சோதனையில் தெரியவந்தது. இருப்பினும், இந்திய வாக்காளர் அடையாள அட்டையை (Voter ID) வைத்திருந்த அவர், தேர்தலில் வாக்களித்துள்ளார். இவரைப் பிடித்த குடியேற்றத் துறை அதிகாரிகள், மேலதிக விசாரணைக்காக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
45 ஆண்டுகளாக வசிக்கும் இலங்கை தமிழர்:
பெரம்பூர் தொகுதியில் வாக்களித்த பாலசந்திரன் என்பவரும் அதிகாரிகளால் பிடிக்கப்பட்டுள்ளார். இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், கடந்த 45 ஆண்டுகளாகத் தமிழகத்திலேயே வசித்து வருகிறார். இருப்பினும், முறையான இந்தியக் குடியுரிமை பெறாத நிலையில் இவர் வாக்களித்ததற்காகக் கைது செய்யப்பட்டு, கொடுங்கையூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
தொடர்ந்து, கைது செய்யப்பட்ட மூவரும் அந்தந்த பகுதி காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அவர்கள் மீது சட்டவிரோதமாக வாக்களித்தல் மற்றும் ஆவண முறைகேடு ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் குளறுபடி?
வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம் மற்றும் நீக்கம் செய்யும் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றவர்களின் பெயர்கள் பட்டியலில் நீடித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குடியேற்றத் துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் இது தொடர்பாகத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றவர்கள் இந்தியத் தேர்தலில் வாக்களிப்பது சட்டப்படி குற்றமாகும்.
இதையும் படிக்க: சட்டமன்றத் தேர்தலில் பாஜக படுதோல்வி.. காரணம் என்ன? அறிக்கை கேட்கும் டெல்லி தலைமை!!
தமிழகத்தில் ஒரு புதிய அரசியல் மாற்றமாக விஜய் தலைமையிலான அரசு அமைந்துள்ள நிலையில், இத்தகைய முறைகேடுகள் அம்பலமாகியுள்ளது தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. வரும் காலங்களில் வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை நீக்க வேண்டிய கட்டாயம் தேர்தல் ஆணையத்திற்கு ஏற்பட்டுள்ளது.