மேகாலயா மாநிலம் மேற்கு கரோ மலைப்பகுதியில் உள்ள சிபாக்ரே பகுதியில், புகழ்பெற்ற ‘1000 டிரம்ஸ் வங்கலா’ திருவிழா கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. கரோ பழங்குடியின மக்களின் பாரம்பரியம், கலாசாரம் மற்றும் தனித்துவத்தைப் பறைசாற்றும் வகையில் பாரம்பரிய இசை, நடன நிகழ்ச்சிகளுடன் விழா தொடங்கியது. ஆயிரம் மேளங்களின் தாளத்துடன் அரங்கேறிய வங்கலா நடனம் பார்வையாளர்களைக் கவர்ந்தது. இதுகுறித்து முதலமைச்சர் கான்ராட் கே. சங்மா கூறுகையில், ஆயிரம் மேளங்களின் இசை கரோ மக்களின் கலாசாரத்தின் இதயத் துடிப்பாக விளங்குவதாகத் தெரிவித்தார். மேலும், இந்த ஆண்டு விழாவுக்காக அரசு 6.26 கோடி ஒதுக்கியுள்ளதாகவும், கரோ மக்களின் வரலாறு, மொழி மற்றும் பாரம்பரியக் கலைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் கூறினார். விழாவில் பாரம்பரிய சடங்குகள், கலாசார நிகழ்ச்சிகள், பழங்குடியின உணவுகள், விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்டவை இடம்பெறுகின்றன. இந்த ஆண்டுக்கான வங்கலா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சி நவம்பர் 13ஆம் தேதி நடைபெற உள்ளது.