இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், நியூயார்க் நகரில் நடைபெற்ற 107வது ஆண்டு வெட்டரன்ஸ் டே அணிவகுப்பில் கிராண்ட் மார்ஷலாக கௌரவிக்கப்பட்டார். நவம்பர் 11ஆம் தேதி மன்ஹாட்டனின் ஐந்தாவது அவென்யூவில் நடைபெற்ற இந்த அணிவகுப்பில், சுமார் 20 ஆயிரம் பேர் பங்கேற்றனர். முன்னாள் ராணுவ வீரர்கள், ஆயுதப்படையினர், பள்ளி மாணவர்கள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் இசைக்குழுவினர் அணிவகுத்துச் சென்றனர். இந்த அங்கீகாரம் தனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் வியப்பையும் அளிப்பதாகக் கூறிய சுனிதா, கடற்படையில் பணியாற்றிய அனுபவமே தன்னை இந்த நிலைக்கு உயர்த்தியதாகத் தெரிவித்தார். நாசாவில் இணைவதற்கு முன்பு விமான சோதனை ஓட்டுநராகப் பணியாற்றிய சுனிதா, மூன்று விண்வெளிப் பயணங்களில் மொத்தம் 608 நாட்கள் விண்வெளியில் இருந்துள்ளார். மேலும், ஒன்பது முறை விண்வெளி நடை மேற்கொண்டு 62 மணி நேரம் செலவிட்டுள்ளார். 2024ல் போயிங் ஸ்டார்லைனர் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்ற அவர், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சுமார் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, 2025 மார்ச் மாதம் பூமிக்குத் திரும்பினார்.