பிரபல ரவுடிக்கு விஐபி கவனிப்பு.. ஆயுதப்படை போலீசார் 3 பேர் சஸ்பெண்ட்.. சென்னை கமிஷனர் அதிரடி!
3 Armed Police Suspended: சென்னையில் பிரபல ரவுடி வெள்ளை காளியிடம் பணத்தை பெற்றுக் கொண்டு சலுகை வழங்கிய ஆயுதப்படையைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் உள்பட 3 போலீசாரை மாநகர காவல் ஆணையர் அபின் தினேஷ் மோதக் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
சென்னையில் பிரபல ரவுடியாக திகழ்ந்து வந்தவர் வெள்ளை காளி. இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி, அடிதடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சென்னையில் பல்வேறு காவல் நிலையங்களில் இவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதற்குரிய தண்டனைகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரபல ரவுடியான வெள்ளை காளி குற்ற சம்பவத்தில் ஈடுபட்டிருந்தார். அது தொடர்பான எழுந்த புகாரின் அடிப்படையில், ரவுடி வெள்ளை காளி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், ஒரு வழக்கு விசாரணைக்காக ரவுடி வெள்ளை காளி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட இருந்தார். இதற்காக, ஆயுதப்படை காவலர்கள் பாதுகாப்பில் ரவுடி வெள்ளை காளி நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட திட்டமிடப்பட்டிருந்தது.
ரவுடிக்கு சிறப்பு சலுகை வழங்கிய ஆயுதப்படை போலீசார்
அதன்படி, ஆயுதப்படை காவல் ஆய்வாளர் மாரிமுத்து, போலீசார் திருமுருகன், செல்லதுரை ஆகிய மூன்று போலீசார் பிரபல ரவுடி வெள்ளை காளியை சிறையில் இருந்து காவல்துறை வாகனத்தில் நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது, ரவுடி வெள்ளை காளிக்கு மூன்று போலீசாரும் பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த தகவல் சக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அபின் தினேஷ் மோதக் கவனத்துக்கு சென்ற நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு காவல் உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.
மேலும் படிக்க: தவெக அமைச்சரவையில் விசிக எண்ட்ரி?.. எதிர்பாராத திருப்பம்?.. சஸ்பென்ஸ் வைக்கும் தலைமை!




ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் சஸ்பெண்ட்
அதன்படி, ரவுடி வெள்ளை காளிக்கு ஆயுதப்படை காவல் ஆய்வாளர் உள்ளிட்ட மூன்று போலீசார்கள் சிறப்பு சலுகைகள் அளித்தது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில், இந்த விசாரணையில் ரவுடி வெள்ளை காளியிடம் மூன்று போலீசாரும் பணம் பெற்றுக் கொண்டு பல்வேறு சலுகைகள் வழங்கியது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஆயுதப்படை காவல் ஆய்வாளர் மாரிமுத்து மற்றும் காவலர்கள் திருமுருகன், செல்லதுரை ஆகிய மூன்று பேரையும் சஸ்பெண்ட் செய்து சென்னை மாநகர காவல் ஆணையர் அபின் தினேஷ் மோதக் உத்தரவிட்டார்.
காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பு
பிரபல ரவுடியை சிறையில் இருந்து விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் பணத்தைப் பெற்றுக் கொண்டு சட்டத்துக்கு புறம்பாக பல்வேறு சலுகைகளை வழங்கிய ஆயுதப்படை போலீசார் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசு சட்டம்- ஒழுங்கில் சமரசம் கிடையாது என்று தெரிவித்துள்ளது. இந்த நிலையில், பிரபல ரவுடிக்கு போலீசார் சலுகை வழங்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: தவெக ஆட்சி மாற்றத்திற்கு பின் பணிக்கு வராத சென்னை மேயர் பிரியா.. காரணம் என்ன?