தவெக அமைச்சரவையில் விசிக எண்ட்ரி?.. எதிர்பாராத திருப்பம்?.. சஸ்பென்ஸ் வைக்கும் தலைமை!
மேலும், "அதிமுகவினருக்கு அமைச்சரவையில் பதவி வழங்கக் கூடாது" என்று விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் தெரிவித்திருந்த கருத்து குறித்துக் கேட்டபோது, "அதிமுகவினர் பெரும்பான்மையாக வரவில்லை என்பதன் அடிப்படையில் சொல்லப்பட்ட கருத்து அது. ரவிக்குமாரின் அந்த கருத்தே கட்சியின் கருத்து; விசிகவின் ஒட்டுமொத்த கருத்து என்றார்.
தமிழகத்தில் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அமைக்கப்பட்ட புதிய அமைச்சரவையில், முதலமைச்சர் விஜய் உட்பட 10 அமைச்சர்களுக்கான இலாகாக்கள் நேற்றைய தினம் அதிகாரப்பூர்வமாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த மே 10ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில், முதலமைச்சர் விஜய் மற்றும் 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு தமிழக ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசியக்காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, மே 13-ஆம் தேதி முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபித்தது. பெரும்பான்மை நிரூபிக்கப்பட்ட நிலையிலும் அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க: திருச்சி கிழக்கில் மு.க.ஸ்டாலின் போட்டி? தூத்துக்குடி திமுகவினர் தீர்மானம்
முதல்வர் விஜய்க்கு ஒதுக்கப்பட்ட முக்கிய துறைகள்:
முதலமைச்சர் விஜயிடம் மாநிலத்தின் மிக முக்கியமான மற்றும் பிரதான துறைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதன்படி, காவல் மற்றும் உள்துறை, பொது நிர்வாகம், மகளிர், இளைஞர் மற்றும் குழந்தைகள் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் விநியோகம், சிறப்புத் திட்ட செயலாக்கம் உள்ளிட்ட துறைகளை அவர் கவனிப்பார்.
தொடர்ந்து, அமைச்சர் என்.ஆனந்த் – ஊரக வளர்ச்சி, நீர்வளத்துறை, வறுமை ஒழிப்புத் திட்டம், நீர்ப்பாசனம் மற்றும் சிறுபாசனம். அமைச்சர் ஆதவ் அர்ஜுனா – பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, அமைச்சர் செங்கோட்டையன் – நிதித்துறை, அமைச்சர் அருண்ராஜ்: மக்கள் நல்வாழ்வுத் துறை மற்றும் மருத்துவக் கல்வி, அமைச்சர் வெங்கடரமணன் – உணவுத்துறை மற்றும் பொது விநியோகத் துறை, அமைச்சர் நிர்மல் குமார் – மின்சாரம், சட்டம் மற்றும் ஊழல் தடுப்புத் துறை, அமைச்சர் ராஜ்மோகன் – பள்ளிக் கல்வித்துறை, தமிழ் வளர்ச்சித் துறை, செய்தி மற்றும் விளம்பரத்துறை, அமைச்சர் பிரபு கனிமவளத்துறை மற்றும் சுரங்கத்துறை, அமைச்சர் கீர்த்தனா தொழில்துறை மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புத் துறை ஆகிய இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுளன.
தவெக அமைச்சரவையில் விசிக?
இதனிடையே, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தலைமை தபால் நிலையம் எதிரே, நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி திராவிடர் கழகம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு பங்கேற்றார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தவெக அமைச்சரவையில் விசிக இடம் பெறுமா என்பது குறித்து கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் முறைப்படி அறிவிப்பார் என்று தெரிவித்தார். “தலைவர் ஏற்கனவே இதுகுறித்து சொல்லியிருக்கிறார், அவரே இறுதி முடிவை அறிவிப்பார். அதற்காக நாங்களும் காத்திருக்கிறோம்” என்று வன்னியரசு கூறினார்.
மேலும் படிக்க: பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள் நடமாட்டம்?.. உருவாகும் ரகசிய நெட்வொர்க்.. முதல்வர் விஜய்யின் அதிரடி உத்தரவு..
அதிமுகவினருக்கு பதவி வழங்கக்கூடாது:
மேலும், “அதிமுகவினருக்கு அமைச்சரவையில் பதவி வழங்கக் கூடாது” என்று விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் தெரிவித்திருந்த கருத்து குறித்துக் கேட்டபோது, “அதிமுகவினர் பெரும்பான்மையாக வரவில்லை என்பதன் அடிப்படையில் சொல்லப்பட்ட கருத்து அது. ரவிக்குமாரின் அந்த கருத்தே கட்சியின் கருத்து; விடுதலைச் சிறுத்தைகளின் ஒட்டுமொத்த கருத்து” என்று வன்னியரசு தெளிவுபடுத்தினார். புதிய அரசின் இலாகா ஒதுக்கீடும், விசிக-வின் இந்த அரசியல் நகர்வுகளும் தமிழக அரசியலில் தற்போதைய முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளன.