AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

முக்கிய துறைகளுக்கு இன்னும் அமைச்சர்கள் இல்லை.. அமைச்சரவை விரிவாக்கத்தில் உள்ள சிக்கல்கள்!!

அரசியலமைப்புச் சட்டத்தின்படி, தமிழ்நாட்டின் மொத்த சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 15 விழுக்காடு, அதாவது அதிகபட்சமாக 35 அமைச்சர்கள் வரை நியமிக்கப்பட அனுமதி உள்ளது. தற்போது வெறும் 10 பேர் மட்டுமே (முதலமைச்சர் உட்பட) பதவியில் உள்ளதால், மீதமுள்ள இடங்களை நிரப்பக் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

முக்கிய துறைகளுக்கு இன்னும் அமைச்சர்கள் இல்லை.. அமைச்சரவை விரிவாக்கத்தில் உள்ள சிக்கல்கள்!!
கோப்புப் புகைப்படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 17 May 2026 13:39 PM IST

தமிழகத்தில் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு அமைந்து, அமைச்சர்களுக்கு முதல்கட்ட இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சரவை விரிவாக்கம் குறித்த அடுத்தகட்ட பரபரப்பு அரசியல் வட்டாரங்களில் தொற்றிக்கொண்டுள்ளது. இன்னும் பல முக்கிய துறைகளுக்கு அமைச்சர்கள் நியமிக்கப்படாமல் இருப்பதன் பின்னணியில், கூட்டணிக் கட்சிகளை அமைச்சரவையில் சேர்ப்பதற்கான தீவிரப் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிக்க: நாகப்பட்டினம் வரலாறு.. நெதர்லாந்து டூ இந்தியா வரும் சோழர்கால செப்பேடுகள்.. அண்ணாமலை சொன்ன விளக்கம்!

முதல்கட்ட இலாக்கா ஒதுக்கீடு:

கடந்த மே 10ஆம் தேதி அன்று ஆளுநர் அர்லேகர் முன்னிலையில், முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது அமைச்சரவையைச் சேர்ந்த 9 அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர். பதவி ஏற்று ஒரு வாரம் ஆகியும் இலாக்காக்கள் ஒதுக்கப்படாமல் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது முதல்கட்டமாக முக்கியத் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, முதலமைச்சர் மற்றும் தற்போதைய அமைச்சர்களுக்குப் பின்வரும் முக்கியத் துறைகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. உள்துறை மற்றும் பொது நிர்வாகம், நிதித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை, பொதுப்பணித்துறை, மருத்துவத்துறை மற்றும் மின்சாரத்துறை, உணவு மற்றும் குடிமைப் பொருட்கள் வழங்கல் துறை, பள்ளிக்கல்வித்துறை, தொழில்துறை, கனிமங்கள் மற்றும் சுரங்கத்துறை.

இன்னும் ஒதுக்கப்படாத முக்கிய துறைகள்:

இருப்பினும், தமிழக நிர்வாகத்தின் மிக முக்கியமான பிற துறைகளுக்கு இன்னும் அமைச்சர்கள் நியமிக்கப்படவில்லை. அதன்படி, வேளாண்மைத் துறை, வருவாய்த் துறை, வீட்டு வசதித் துறை. கூட்டுறவுத் துறை, போக்குவரத்துத் துறை, உயர்கல்வித் துறை, சமூக நலன், மீன்வளத்துறை, தகவல் தொழில்நுட்பத் துறை, சிறுபான்மையினர் நலன், தொழிலாளர் துறை, ஆதி திராவிடர் நலத்துறை.

அமைச்சரவை விரிவாக்கம்:

அரசியலமைப்புச் சட்டத்தின்படி, தமிழ்நாட்டின் மொத்த சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 15 விழுக்காடு, அதாவது அதிகபட்சமாக 35 அமைச்சர்கள் வரை நியமிக்கப்பட அனுமதி உள்ளது. தற்போது வெறும் 10 பேர் மட்டுமே (முதலமைச்சர் உட்பட) பதவியில் உள்ளதால், மீதமுள்ள இடங்களை நிரப்பக் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

காங்கிரஸுக்குப் பிரதிநிதித்துவம்:

தவெகவுடன் கூட்டணி அமைத்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்களுக்கு எந்தெந்தத் துறைகளை வழங்குவது என்பது குறித்து தீவிர ஆலோசனை நடந்து வருகிறது.

விசிக மற்றும் அதிமுக ஆதரவாளர்கள்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒரு அமைச்சர் பதவி வழங்குவது குறித்துப் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், அதேபோல் அதிமுகவிலிருந்து விலகி தாவேகாவுக்கு ஆதரவு தெரிவித்த முக்கியப் புள்ளிகளுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிக்க: முன்னாள் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட மண்டலங்களும்.. திமுகவின் தேர்தல் சறுக்கல்களும்.. முழு விவரம்

இடதுசாரிகள் மறுப்பு:

புதிய அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவளிப்பதாக அறிவித்துள்ள இடதுசாரி (கம்யூனிஸ்ட்) கட்சிகள், தாங்கள் அமைச்சரவையில் இடம்பெறப் போவதில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டன. இத்தகைய கூட்டணிக் கட்சிகளுடனான அதிகாரப் பகிர்வு மற்றும் பேச்சுவார்த்தைகள் தற்சமயம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாலேயே அமைச்சரவை முழுமையாக விரிவாக்கம் செய்யப்படாமல் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த இழுபறிகள் மற்றும் ஆலோசனைகள் இன்னும் சில நாட்களில் முடிவுக்கு வந்ததும், காலியாக உள்ள அனைத்து முக்கியத் துறைகளுக்கும் புதிய அமைச்சர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்று தாவேகா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us