அதிமுகவில் நீடிக்கும் உள்கட்சி பூசல்.. மேலும் 2 மாவட்ட செயலர்களை நீக்க எடப்பாடி பழனிசாமி உத்தரவு!
AIADMK 2 District Secretaries Removed : அதிமுகவில் கட்சி விதிகளை மீறியதாக மேலும் புதுக்கோட்டை மற்றும் தென்காசி ஆகிய இரு மாவட்ட செயலாளர்களை கட்சி பதவியில் இருந்து நீக்கி பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார் .
தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பெரும் தோல்வியை சந்தித்தது. இதில், ஏற்பட்ட அதிருப்தி காரணமாக முன்னாள் அமைச்சர்களான எஸ். பி. வேலுமணி, சி.வி. சண்முகம் ஆகியோர் தலைமையில் 25 எம்எல்ஏக்கள் ஒரு குழுவாகவும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் 22 எம்எல்ஏக்கள் ஒரு குழுவாகவும் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். இதில், எஸ். பி. வேலுமணி தலைமையிலான எம்எல்ஏக்கள் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதற்கு எடப்பாடி தலைமையிலான எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன் தமிழக ஆளுநர் அர்லேகரிடம் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்தனர். இதேபோல, சி. வி. சண்முகம் தலைமையிலான குழுவும் ஆளுநரிடம் எடப்பாடி உள்ளிட்டவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனர்.
26 மாவட்ட செயலாளர்கள் கூண்டோடு நீக்கம்
இந்த நிலையில், அதிமுகவின் கட்சி விதிகளுக்கு அப்பாற்பட்டு செயல்பட்டதாக கூறி எஸ்.பி. வேலுமணி, சி. வி. சண்முகம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட 26 மாவட்ட செயலாளர்களை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி அதிரடியாக கட்சி பொறுப்பில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். இந்த பதவிகளுக்கு புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்திருந்தார். இந்த நிலையில், அதிமுகவிலிருந்து மேலும் இரு மாவட்ட செயலாளர்களை நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் படிக்க: பிரதமர் மோடி வேண்டுகோள்: தமிழக ஆளுநரின் கான்வாய் வாகனங்கள் 4- ஆக குறைப்பு!




மேலும் இரு மாவட்ட செயலாளர்கள் நீக்கம்
இது தொடர்பாக, அவர் பிறப்பித்துள்ள உத்தரவில், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர் பி. கே. வைரமுத்து மற்றும் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் சி. கிருஷ்ண முரளி ஆகியோரை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த இரு கட்சி பதவிகளுக்கும் கட்சியை சேர்ந்த வேறு ஒருவர் நியமனம் செய்யப்படுவார் என்று தெரிகிறது. அதிமுக தோல்விக்கு பிறகு சட்டமன்ற குழு தலைவர் பதவியே பெறுவதற்கு எஸ். பி. வேலுமணி, எடப்பாடி இடையே மோதல் போக்கு நிலவியதாக கூறப்படுகிறது.
இரு பிரிவாக செயல்பட்டு வரும் அதிமுகவினர்
அத்துடன், திமுக ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி முதல்வராக விரும்பியதாகவும், அதனை நாங்கள் எதிர்த்ததாகவும் சி. வி. சண்முகம் குற்றம் சாட்டியிருந்தார். மேலும், தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து அமைச்சரவையில் பதவியே பெறலாம் என்று சி.வி. சண்முகம் தரப்பு எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக தெரிகிறது. இதற்கு, எடப்பாடி மறுப்பு தெரிவித்த நிலையில் இந்த மோதல் போக்கு உச்சக்கட்டத்தை எட்டியதாகவும் தகவல்கள் வெளியாகின. இதன் காரணமாகவே அதிமுகவில் இரு குழுவாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: திருச்சி கிழக்கில் மு.க.ஸ்டாலின் போட்டி? தூத்துக்குடி திமுகவினர் தீர்மானம்