நெல்லையில் கொடூரத்தின் உச்சம்.. குழந்தை கண் முன்னே தாய் வெட்டி படுகொலை.. மர்ம நபர்கள் வெறிச்செயல்..!
Tirunelveli Female Bank Employee Murder : திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் பொது இடத்தில் வங்கி பெண் ஊழியர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகள் தேடுதல் வேட்டை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே உள்ள ஆழ்வார்திருநகரி பகுதியை சேர்ந்தவர் முத்துமாலை. இவர், தனியார் வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும், பெங்களூரில் வசித்து வரும் இவரது கணவருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக முத்துமாலை தனது கணவரை பிரிந்து கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக பாளையங்கோட்டை தியாகராஜ நகர் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் தனது 7 வயது மகளுடன் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில், முத்துமாலை தனது மகளுடன் பைக்கில் நேற்று சனிக்கிழமை ( மே 16- ஆம் தேதி) தியாகராஜ நகர் 9- ஆவது தெற்கு தெருவில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் இருவர் அவரை வழிமறித்தனர்.
பொது இடத்தில் வங்கி பெண் ஊழியருக்கு சரமாரி வெட்டு
அப்போது, முத்துமாலை தனது இருசக்கர வாகனத்தை நிறுத்துவதற்குள் அந்த மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்ட தொடங்கினர். இதில், தலை மற்றும் உடல் ஆகிய பகுதிகளில் பலத்தை வெட்டு காயம் அடைந்த முத்துமாலை ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்து விழுந்தார். உடனே, அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இந்த சம்பவத்தை பார்த்த அருகில் இருந்தவர்கள் பெருமாள் புரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
மேலும் படிக்க: தவெக அமைச்சரவையில் விசிக எண்ட்ரி?.. எதிர்பாராத திருப்பம்?.. சஸ்பென்ஸ் வைக்கும் தலைமை!




கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை
பலத்த வெட்டு காயங்களுடன் கிடந்த முத்துமாலையை மீட்டு அவசர ஆம்புலன்ஸ் மூலமாக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, மருத்துவர்கள் பரிசோதித்ததில் அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து, அவரது சடலம் உடல் கூறாய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பெருமாள்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் குடும்ப பிரச்சினை காரணமாக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைப்பு
மேலும், கொலையாளிகளை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேர்தல் வேட்டை நடைபெற்று வருகிறது. அத்துடன், அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். நடுரோட்டில் பெண் வங்கி ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: அமைச்சர் பதவிக்கு ரூ.150 கோடி பேரம்.. முன்னாள் முதல்வர் நாராயணசாமி பரபரப்பு குற்றச்சாட்டு!