ஊட்டி மலர் கண்காட்சிக்கு போறீங்களா? பஸ் டென்ஷன் இனி இல்ல.. சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
Ooty Flower Exhibition Special Buses Operated : நீலகிரி மாவட்டம், ஊட்டி மலர் கண்காட்சியில் பங்கேற்கும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்களின் வசதிக்காக சுமார் 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .
தமிழகத்தில் கோடை காலத்தையொட்டி, நீலகிரி மாவட்டம், ஊட்டியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து காணப்படுபவர். இந்த நிலையில், ஆண்டுதோறும் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் உலக புகழ்பெற்ற மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருவது வழக்கமாகும். இந்த மலர் கண்காட்சியை பார்ப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகை தருவார்கள். இந்த வகையில், இந்த ஆண்டுக்கான மலர் கண்காட்சி இன்று திங்கள்கிழமை ( மே 18- ஆம் தேதி) தொடங்குகிறது. இந்த மலர் கண்காட்சியானது வருகிற மே 28- ஆம் தேதி வரை சுமார் 11 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியை காண்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களின் வசதிக்காக கடந்த ஏப்ரல் மாதம் முதல் சுற்றுப்பாதை பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
சுற்றுலா பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள்
இந்த நிலையில், மலர் கண்காட்சியையொட்டி, கூடுதல் சுற்றுப்பாதை பேருந்துகள் மற்றும் பார்க் அண்ட் ரைடு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும், மலர் கண்காட்சியே பார்த்துவிட்டு சொந்த ஊர் திரும்பவும் பொது மக்களின் வசதிக்காக ஊட்டியில் இருந்து கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், மேட்டுப்பாளையம் ஆகிய ஊர்களுக்கு 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த பேருந்துகள் சுமார் 5 நிமிடங்களுக்கு ஒரு முறை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல, மேட்டுப்பாளையம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் ஆகிய ஊர்களில் இருந்தும் ஊட்டிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
மேலும் படிக்க: கொளுத்தும் கோடை வெயிலுக்கு குட்பை.. சிலிர்க்க வைக்கும் சிறுவாணி நீர் வீழ்ச்சி.. ஒரே நாளில் ஒரு ஜாலி ட்ரிப்!




போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஏற்பாடு
மலர்கண்காட்சி நடைபெறும் 11 நாட்களில் குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலை மற்றும் கோத்தகிரி சாலை ஆகியவற்றில் பேருந்துகள் பழுதாகி நின்றால் உடனடியாக பேருந்தில் ஏற்பட்ட பழுதுகளை சரி செய்யும் வகையில் மொபைல் பழுது பார்ப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதே போல, சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் ஏதேனும் பழுதாகி போக்குவரத்துக்கு இடையூறாக நிற்கும் பட்சத்தில், அந்த வாகனங்களை அகற்றுவதற்காக கிரேன் வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
பேருந்து இயக்கத்தை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் நியமனம்
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் நடத்தப்படும் இந்த மலர் கண்காட்சி மிகவும் பிரபலமானதாகும். இந்த மலர் கண்காட்சியில் பங்கேற்கும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஆண்டுதோறும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்த ஆண்டும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த பேருந்துகளை கண்காணிப்பதற்காக சிறப்பு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.