வாட்டி வதைக்கும் கோடை வெயில்.. 50 அடி உயரத்தில் இருந்து விழும் அதிசய அருவி.. படகு சவாரியுடன் பக்காவான இடம்!
Thirparappu Waterfalls: கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள திற்பரப்பு சுற்றுலா தலம் மிக சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு, 50 அடி உயரத்தில் இருந்து விழும் அருவி, படகு சவாரி, பழைமையான சிவன் கோயில், சிறுவர்களுக்கான நீச்சல் குளம் உள்ளிட்டவை அமைந்துள்ளன.
தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால், சுற்றுலா தலங்களை நோக்கி பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர். பெரும்பாலும் சுற்றுலா பயணிகள் உள்நாட்டு சுற்றுலாத் தலங்களுக்கு முன் உரிமை அளித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழகத்தில் பல்வேறு சுற்றுலாத் தலங்கள் சிறப்பு வாய்ந்தவையாக இருந்து வருகிறது. இதில், கன்னியாகுமரி மாவட்டத்தில் கோதை ஆற்றின் குறுக்கே அமைந்திருக்கும் திற்பரப்பு அருவி ஒரு பிரபலமான சுற்றுலா தலமாகும். இங்கு சுமார் 50 அடி உயரத்தில் இருந்து விழும் தண்ணீரை பார்ப்பதற்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை தரும். அவ்வாறு வானிலிருந்து, பூமி நோக்கி விழும் தண்ணீர் பாறைகளில் முட்டி, மோதி பாறைகள் நிறைந்த படுகையில் பாய்ந்து செல்கிறது. இந்த மினி குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் கோடை வெயிலுக்கு சவால் விடும் வகையில் குளித்து மகிழலாம். இதை முடித்துக் கொண்ட கையோடு அப்படியே சற்று நகர்ந்தால் சிறுவர்களுக்கான நீச்சல் குளம் மற்றும் சிறுவர் பூங்கா அமைந்துள்ளது.
சிறுவர், சிறுமிகளுக்கான நீச்சல் குளம்
50 அடி உயரத்தில் இருந்து விழும் அருவியில் குளிக்க அச்சம் கொள்ளும் சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் இந்த நீச்சல் குளத்தில் குளித்து குத்தாட்டம் போடலாம். இதை முடித்த பின்னர் சிறுவர் பூங்காவில் சற்று குடும்பத்தினருடன் இளைப்பாறலாம். அந்த பூங்காவில் பல்வேறு வகையான மரங்கள், செடிகள், கொடிகள் உள்ளிட்டவை உள்ளன. மேலும், இங்கு அமைக்கப்பட்டு இருக்கும் சிறுவர்களுக்கான விளையாட்டு பொருட்கள் ஆகியவற்றில் சிறுவர்கள் விளையாடி மகிழலாம். மொத்தத்தில் இத்துடன் சுற்றுலா செல்வதற்கு திற்பரப்பு அருவி மிக சிறந்த சுற்றுலா தலமாகும்.
மேலும் படிக்க: மக்களே கோடை விழாவுக்கு தயாரா.. கண்களை கட்டி இழுக்கும் வண்ண மலர்கள்.. விரைவில் தொடங்குகிறது ஊட்டி மலர் கண்காட்சி!




சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் படகு சவாரி
அத்துடன் குறைந்த பட்ஜெட்டில், ஒன்டே ட்ரிப்புக்கு ஏற்ற இடமாகவும் திற்பரப்பு அருவி விளங்கி வருகிறது. இந்த பகுதியில் இது மட்டுமா உள்ளது என கேள்வி எழுப்பலாம். இதற்கு மேலும் முக்கியமான ஒரு சுற்றுலா உள்ளது. அது என்னவெனில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் படகு சவாரி தான். இந்த பகுதியில் அமைந்துள்ள அருவியின் மேல் பகுதியில் உள்ள தடுப்பணையில் படகு சவாரி செயல்பட்டு வருகிறது. இங்கு, இயற்கை அழகை ரசித்த வாரும், அடிக்கிற காற்றுக்கு ஏற்ப நடனம் ஆடும் தண்ணீரை ரசித்த வாறும் படகு சவாரி மேற்கொள்ளலாம்.
ஆன்மீக சுற்றுலாவுக்கும் ஏற்ற இடம்
கோடைகால இன்ப சுற்றுலா ஒருபுறம் இருந்தால், அதன் அருகிலேயே அமைந்துள்ளது பழமையான சிவன் கோவில். இந்த கோவிலுக்கு சுற்றுலா பயணிகள் சென்று வரலாம். இதனால், திற்பரப்பு பகுதி கோடைகால இன்ப சுற்றுலாவுக்கும், ஆன்மீக சுற்றுலாவுக்கும் ஏற்றதாக இருந்து வருகிறது. நாகர்கோவிலில் இருந்து சுமார் 42 கிலோ மீட்டர் தொலைவிலும், குலசேகரத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிலும் திற்பரப்பு அருவி அமைந்துள்ளது.
மேலும் படிக்க: வானுயர வளர்ந்திருக்கும் மரங்கள்.. தவழ்ந்திருக்கும் கொடிகள்.. ஆனந்தமான பரிசல் பயணம்.. ஈரோடு அருகே சூப்பர் ஸ்பாட்!