பச்சை கம்பளம் விரித்த தேயிலை தோட்டம்.. தேகத்தை முத்தமிட்டு செல்லும் மேகக்கூட்டம்.. கோடை சுற்றுலாவுக்கு வெயிட்டான ஸ்பாட்!
Kolukku Hill Tourist Sopt: தமிழகத்தில் பல்வேறு சுற்றுலா தலங்கள் இருக்கும் நிலையில், தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள கொழுக்கு மலை மிக முக்கிய சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு என்னென்ன சுற்றுலா இடங்கள் உள்ளன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனிடையே தினந்தோறும் கொளுத்தி வரும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக சுற்றுலா பயணிகள் அனைவரும் சுற்றுலா தலங்களை நோக்கி படை எடுக்க தொடங்கி உள்ளனர். இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளின் தலைகள் தெரிந்த வண்ணமாக உள்ளன. சில சுற்றுலா பயணிகள் எங்கு சுற்றுலா செல்லலாம் என்ற எண்ணத்திலும், வேறு எந்த பகுதிக்கு சுற்றுலா செல்லலாம் என்ற எண்ணத்திலும் மூழ்கி இருப்பர். அவர்களுக்காக அமைந்துள்ளது கொழுக்கு மலை சுற்றுலா தலம். சுற்றுலா தலத்தின் பெயர் சற்று வித்தியாசமாக இருந்தாலும் இந்த பகுதி சுற்றுலாப் பயணிகளை கட்டி இழுக்கும் வகையில் மிகவும் பிரமாண்டமாக அமைந்துள்ளது. அப்படி என்ன உள்ளது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
மேகங்களுக்கு நடுவே சூரிய உதயம் – அஸ்தமனம்
இந்த கொழுக்கு மலையானது தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு, அமைந்துள்ள சன்ரைஸ் பாயிண்ட்டில் நின்று கொண்டு அதிகாலை மற்றும் மாலை வேளையில் மேகங்களுக்கு நடுவே சூரியன் உதிக்கும் காட்சியையும், மறையும் காட்சியையும் கண்டு ரசித்திட கண்கள் கோடி வேண்டும். அப்படியே சற்று நகர்ந்தால் 1900- ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்ட பாரம்பரியமான முறையில் தேயிலை தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ளது.
மேலும் படிக்க: விலங்குகளின் ராஜ்ஜியம்.. பசுமையின் சங்கமம்.. தென்னிந்தியாவின் சிரபுஞ்சி.. என்ஜாய்மெண்டுக்கு கியாரண்டி!




பாரம்பரியம் மாறாமல் தயார் செய்யப்படும் தேயிலை தூள்
மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலையில் பெரிதளவில் இயந்திரங்கள் இல்லாமல் தொழிலாளர்கள் கைகளால் பறிக்கப்பட்ட தேயிலைகள் மூலம் தேயிலை துள்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது. இதனால், இங்கு சுற்றுலா செல்லும் சுற்றுலா பயணிகள் கொழுக்குமலை தேயிலைத் தூளை கட்டாயம் வாங்கி வந்து சுவைத்து பார்க்க வேண்டும். முன்னதாக, இதே பகுதியில் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் பச்சை பசேல் என படர்ந்து விரிந்து இருக்கும் தேயிலை தோட்டங்களுக்கு மத்தியில் சற்று காலாற நடை போடலாம்.
தேயிலை தோட்டத்துக்கு மத்தியில் புத்துணர்சி நடைபயணம்
விளம்பரங்களில் வருவது போல டீ குடித்தால் தான் புத்துணர்ச்சி கிடைக்குமா. தேயிலை தோட்டங்களுக்கு மத்தியில் நடந்தாலும் புத்துணர்ச்சி கிடைக்கும் என்பதற்கு உதாரணமாக தேயிலை தோட்ட நடைபயணம் இருக்கும். அமைதியாக நடைபெற்று வரும் சுற்றுலாவுக்கு மத்தியில் திரில்லிங்கான சுற்றுலாவுக்காக அமைந்திருக்கிறது குரங்கணி மலைத்தொடர். இந்த மலைத்தொடரில் மலை ஏற்றம் செய்து அதன் உச்சியில் அமைந்திருக்கும் இயற்கை அழகை கண் கூறாக கண்டு ரசிக்கலாம். இந்த கொழுக்கு மலையை அடைவதற்கு ஜீப் சவாரிப்பயணமும் முக்கிய பங்கு வகிக்கிறது.
தங்கியிருந்து பொழுதை கழிப்பதற்கும் ஏற்ற இடம்
இங்கே சுற்றுலா செல்லும் சுற்றுலா பயணிகள் தங்கி இருந்து பொழுதை கழிப்பதற்கு தேயிலை தோட்டங்களுக்கு நடுவே அமைக்கப்பட்டுள்ள பங்களாக்கள் மற்றும் முகாம்களில தங்கிக் கொள்ளலாம். தேனியில் இருந்து சுமார் 65 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இவ்வளவு ரம்யமான கொழுக்கு மலைக்கு சுமார் 1:30 மணி நேர பயணத்தில் சென்றடையலாம். அப்புறம் என்ன கோடை சுற்றுலாவுக்கு இந்த இடத்துக்கு சென்று தான் பாருங்களேன்.
மேலும் படிக்க: தமிழ்நாடு பார்டரில் ஒரு குட்டி வெளிநாடு.. வார இறுதியில் ஒரு விசிட் அடிங்க.. சொர்க்கம்னா இதுதான்!