கரூர் அரசு பணிகளை தவெக அரசு திரும்ப பெற வேண்டும்.. இந்திய கம்யூ. வீரபாண்டியன்!
CPI Secretary Veerapandian : சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் உத்தரவை ஏற்று கரூரில் வழங்கப்பட்ட அரசுப் பணிகளை தமிழக வெற்றிக் கழக அரசு திரும்ப பெற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் தெரிவித்தார்.
கரூர் அரசு பணிகளை திரும்ப பெற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் வலியுறுத்தினார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்த 31 பேருக்கு அரசு பணி வழங்கிய அரசாணையை சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு வழங்கப்படும் வேலை கருணை அடிப்படையில் என்றாலும், இது சட்டத்துக்கு புறம்பானதாகும். அத்துடன், தவறான முன்னுதாரணம் ஆகும். எனவே, இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்பட பல்வேறு கட்சிகள் தரப்பினராலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த எதிர்ப்பை தமிழக வெற்றிக் கழக அரசு கவனத்தில் கொள்ளாமல் மேற்கண்ட 31 பேருக்கு அரசு வேலையை வழங்கி இருந்தது. தற்போது, அந்த அரசு பணிகளுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
அரசு பணிகளை தவெக அரசு திரும்ப பெற வேண்டும்
எனவே, மதுரை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று அரசு பணி வழங்கியதை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். மேலும், இந்த வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வதை தமிழக அரசு தவிர்க்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது. அதே வேளையில், கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தேவையான வேலை வாய்ப்பு மற்றும் பொருளாதார உதவிகளை தமிழக வெற்றி கழகம் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்று செய்ய வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தமிழகத்தில் இந்தாண்டும் உள்ளாட்சி தேர்தல் நடக்க சாத்தியமில்லை? ஏன் இந்த தாமதம்!




அரசு பணி வழங்கலுக்கு எதிராக வழக்கு தாக்கல்
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்த 31 பேருக்கு தமிழக முதல்வர் கடந்த ஜூலை 10- ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 நிலையிலான பணியிடங்களுக்கான நியமன ஆணைகளை வழங்கி இருந்தார். இதனை எதிர்த்து நாம் தமிழர் கட்சி மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்த நிலையில், இன்று திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அரசு பணி ஆணைகளை ரத்து செய்த நீதிமன்றம்
அப்போது, வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள் சாதாரண அரசு பணி என்றாலும் அது பணி ஆகும். தமிழகத்தில் அரசு பேருந்து விபத்து, சிவகாசி வெடி விபத்து உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்க முடியுமா என கேள்வி எழுப்பியதுடன், கரூரில் அரசு பணி வழங்கியதற்கான ஆணைகளை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவுக்கு தொல்லை.. காவல் ஆணையரிடம் பரபரப்பு புகார்.. முழு விவரம் என்ன!