தமிழகத்தில் இந்தாண்டும் உள்ளாட்சி தேர்தல் நடக்க சாத்தியமில்லை? ஏன் இந்த தாமதம்!
Tamil Nadu Local Body Election: தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாது என தகவல் வெளியாகி உள்ளது. மேலும், மாநில நிதிக்குழுவின் பதவிக்காலமும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
தமிழகத்தில் கடந்த 2019- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. சுமார் 27 மாவட்டங்களில் நடைபெற்ற இந்த தேர்தலில் வெற்றி பெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவி காலம் கடந்த 2025- ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5- ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதன் காரணமாக சுமார் 92 ஆயிரம் உள்ளாட்சி பதவிகள் காலியாக உள்ளன. இதில், ஊரக உள்ளாட்சி பணிகளை கவனிப்பதற்காக, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டோர் சிறப்பு அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டிருந்தனர். இதனால், தமிழகத்தில் கடந்த 1.5 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டு உள்ளாட்சி பதவிகளை கைப்பற்ற தவெக திட்டமிட்டது.
2027- க்கு தள்ளிப்போகும் உள்ளாட்சி தேர்தல்
ஆனால், தமிழக அரசின் தற்போதைய நடவடிக்கையின் காரணமாக உள்ளாட்சித் தேர்தல் அடுத்த ஆண்டு 2027- ஆம் ஆண்டு மார்ச் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது, நகர்ப்புற, ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் நிதி நிலவரத்தை ஆய்வு செய்து, தமிழக அரசுக்கு உரிய பரிந்துரைகள் வழங்க வேண்டும். இதற்காக 7- ஆவது மாநில நிதி குழு அமைக்கப்பட்டிருந்தது. இந்த குழுவின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 31- ஆம் தேதியுடன் முடிவடைய இருந்தது.
மேலும் படிக்க: “பார்ட்டி ஃபண்ட் தெரியாதது போல் நடிப்பு”.. முன்னாள் அமைச்சர் சேகர் பாபுவை மறைமுகமாக தாக்கிய மரிய வில்சன்!




மாநில நிதிக்குழுவின் பதவிக்காலம் நீட்டிப்பு
இதனால், முன்னதாக அந்த குழு தனது அறிக்கையை தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாநில நிதிக்குழுவின் பதவிக்காலத்தை டிசம்பர் 31- ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுவது தாமதம் ஆகும் நிலை உருவாகி உள்ளது. இது மட்டும் இன்றி புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் வார்டுகள் வரையறை செய்யும் பணிகளும் நிலுவையில் இருந்து வருகிறது.
உள்ளாட்சி பதவிகளில் பெரும்பாலும் திமுக-அதிமுக
இந்த பணிகள் நடத்தி முடிக்கப்பட்ட பின்னரே உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் சூழல் நிலை இருந்து வருகிறது. இதனால், இந்த ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாது என்று பரவலாக கூறப்படுகிறது. தவெக ஆட்சி அமைந்திருந்தாலும் உள்ளாட்சி பதவிகளில் பெரும்பாலும் திமுக மற்றும் அதிமுகவினர் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால், தேர்தலை நடத்தி பதவிகளை தன்வசப்படுத்த தவெக திட்டமிட்டிருந்ததாக கூறப்பட்ட நிலையில், உள்ளாட்சி தேர்தல் தள்ளிபோகும் நிலை ஏற்பட்டதாக தெரிகிறது.
மேலும் படிக்க: வேளாண் பட்ஜெட் 2026.. பச்சைத் துண்டுடன் களமிறங்கிய 10 அமைச்சர்கள்.. விவசாயிகளிடம் கருத்துக் கேட்பு!!