சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்மன்’ படத்தின் ஹைதராபாத் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்துள்ளது. இதனிடையே, இயக்குநர் நெல்சன் திலீப்குமார் ‘ஜெயிலர் 2’ படத்தில் சில மாற்றங்களைச் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மாறிவரும் அரசியல் சூழலால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளைத் தவிர்க்கும் வகையில், படத்தின் சில காட்சிகள் நீக்கப்பட்டு மீண்டும் படமாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. எந்தக் காட்சிகள் மாற்றப்பட்டுள்ளன என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ஜெயிலர் 2’, வரும் அக்டோபர் 15ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில், அதன் இரண்டாம் பாகத்தை அதைவிட பிரம்மாண்டமாக உருவாக்க நெல்சன் தீவிரமாகப் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில், முதல் பாகத்தின் முக்கிய நடிகர்கள் மீண்டும் நடிக்கின்றனர். மேலும் பல புதிய நடிகர்கள் இணைந்துள்ளனர். மலையாள நடிகை அன்னா ரேஷ்மா ராஜன் பெண் வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஹிருத்திக் ரோஷனின் சிறப்புத் தோற்றமும் படத்தின் முக்கிய சிறப்பம்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.