பக்தர்கள் கவனத்திற்கு..! திருவண்ணாமலை இடுக்குப் பிள்ளையார் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்..
புதிய அறிவிப்பின்படி, உடல் பருமன் உள்ளவர்கள், கடுமையான உடல்நலக் குறைபாடு உள்ளவர்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் ஆகியோர் இடுக்குப் பிள்ளையார் கோயிலின் குறுகலான பாதைக்குள் சென்று வர அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவாமி தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் அனைவரும் கோயில் நிர்வாகத்தின் அறிவிப்புக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது
ஜூலை 27, 2026: திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள அருணகிரி இடுக்குப் பிள்ளையார் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலின் கட்டுப்பாட்டில் அமைந்துள்ள இந்தக் கோயில், சிறிய குகை போன்ற தோற்றத்தில் உள்ளது. பக்தர்கள் அதன் குறுகிய பாதை வழியாக உள்ளே நுழைந்து, மறுபுறம் வெளியே வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இதனால், இங்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் பலரும் நீண்ட வரிசையில் காத்திருப்பார்கள்.
இடுக்கு பிள்ளையார் கோயிலுக்கு சென்ற பக்தர் உயிரிழப்பு:
இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு ஆந்திராவைச் சேர்ந்த மணிக்குமார் என்பவர் தனது குடும்பத்துடன் கிரிவலம் சென்றார். அப்போது, இடுக்குப் பிள்ளையார் கோயிலின் குறுகிய குகைக்குள் நுழைந்து வெளியே வர முயன்றபோது, அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
இதைக் கண்ட பக்தர்கள் அவரை உடனடியாக வெளியே மீட்டனர். பின்னர், 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் படிக்க: 717 டாஸ்மாக் கடைகள் உண்மையிலேயே மூடப்பட்டதா? RTI ஆதாரத்தை கேக்கும் நயினார் நாகேந்திரன்!
இதையடுத்து, பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் நலனைக் கருத்தில் கொண்டு, இடுக்குப் பிள்ளையார் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
வழிக்காட்டு நெறிமுறைகள் வெளியீடு:
இடுக்குப் பிள்ளையார் கோயிலுக்குச் செல்லும் பாதை மிகவும் குறுகலான அமைப்பைக் கொண்டுள்ளதால், அங்கு செல்லும் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாவதைத் தவிர்க்கவும், அசம்பாவிதங்களைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புதிய அறிவிப்பின்படி, உடல் பருமன் உள்ளவர்கள், கடுமையான உடல்நலக் குறைபாடு உள்ளவர்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் ஆகியோர் இடுக்குப் பிள்ளையார் கோயிலின் குறுகலான பாதைக்குள் சென்று வர அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: கரூர் அரசுப் பணி ரத்து உத்தரவு.. உச்சநீதிமன்றம் செல்லும் தமிழக அரசு.. நாளை மேல்முறையீடு செய்ய திட்டம்!
பக்தர்களின் பாதுகாப்பை முதன்மையாகக் கொண்டு இந்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளதால், சுவாமி தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் அனைவரும் கோயில் நிர்வாகத்தின் அறிவிப்புக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.