புதிய இடத்திற்கு மாற்றம் செய்யப்படும் முதலமைச்சர் அலுவலகம்.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..
தலைமைச் செயலகத்தில் செயல்பட்டு வரும் முதலமைச்சரின் அலுவலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திற்கு மாற்றப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. முதலமைச்சரின் அலுவலகம் 10-வது தளத்திற்கு மாற்றப்பட உள்ளதால், தற்போது அந்தத் தளத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு துறைகளின் அலுவலகங்கள் தற்காலிகமாக மாற்றப்படுகின்றன.
ஜூலை 27, 2026: தலைமைச் செயலகத்தில் செயல்பட்டு வரும் முதலமைச்சரின் அலுவலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திற்கு மாற்றப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தற்போது நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் செயல்பட்டு வரும் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் பல்வேறு பிரிவுகள் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடமாற்றம் செய்யப்படும் முதல்வர் அலுவலகம்:
அதன்படி, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் வரவு-செலவுப் பிரிவு, பொருட்காட்சி அனுமதிப் பிரிவு, முதலமைச்சரின் சமூக ஊடகப் பிரிவு (CMO Social Media), கட்டுப்பாட்டுப் பிரிவு, இயக்குநர் அருள் மற்றும் தமிழ் வளர்ச்சி மற்றும் மொழிபெயர்ப்புத் துறை, செய்தித்துறை, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் பாஸ்கரன், இரவிச்சந்திரன், அ.வே. சுரேந்திரன், த. கலைச்செல்வன் ஆகியோரின் அலுவலகங்கள், எழுத்துப்பொருள் அறை உள்ளிட்ட அனைத்து பிரிவுகளும் உடனடியாக சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்திற்கு மாற்றப்படுகின்றன.
இந்த அலுவலகங்கள் சேப்பாக்கம் கலைவாணர் அரங்கின் தரைத்தளம் (500 சதுர அடி), இரண்டாவது தளம் (400 சதுர அடி), மூன்றாவது தளம் (2,000 சதுர அடி) ஆகிய காலியாக உள்ள பகுதிகளில் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை இயக்குநர், காலியாக உள்ள இடங்களை ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் பிரிவுகளுக்குத் தேவையான இடங்களை ஒதுக்கி, அவர்கள் பணிபுரிய தேவையான அனைத்து வசதிகளையும் உடனடியாக செய்து தருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
உடனடியாக மாற்ற நடவடிக்கை:
மேலும், பொதுப்பணித் துறையின் கோட்டப் பொறியாளர், மேஜை, நாற்காலி, சோபா, கணினி, கோப்புகள் உள்ளிட்ட அனைத்து அலுவலக உபகரணங்களையும் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திலிருந்து சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்திற்கு உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் அலுவலகம் 10-வது தளத்திற்கு மாற்றப்பட உள்ளதால், தற்போது அந்தத் தளத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு துறைகளின் அலுவலகங்கள் தற்காலிகமாக மாற்றப்படுகின்றன.
மேலும் படிக்க: கரூர் அரசு பணிகளை தவெக அரசு திரும்ப பெற வேண்டும்.. இந்திய கம்யூ. வீரபாண்டியன்!
அதன்படி, அரசு துணைச் செயலாளர் கே. வெங்கடேசன் (உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை – குண்டர் தடுப்புக் காவல் பிரிவு) ஆகியோரின் அலுவலகம் 8-வது தளத்தில் உள்ள உணவு அருந்தும் அறை எண் 7 மற்றும் கூட்ட அரங்கத்திற்கு மாற்றப்படுகிறது.
மாற்றப்படும் அலுவலகங்களின் விவரங்கள்:
அரசு இணைச் செயலாளர் நாராயணி மற்றும் தொடர்புடைய அலுவலகங்கள் 7-வது தள கூட்ட அரங்கத்திற்கு மாற்றப்படுகின்றன. வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறையின் துணைச் செயலாளர்கள் க. கருப்பையா, நீ. ராஜேஸ்வரி ஆகியோரின் அலுவலகங்கள் 5-வது தள கூட்ட அரங்கத்திற்கு மாற்றப்படுகின்றன. வணிகவரித்துறையின் பிரிவுகள் மற்றும் அரசு சார்புச் செயலாளர்களின் அறைகள் 5-வது தள உணவு அருந்தும் அறை எண் 1 மற்றும் முதல் தள கூட்ட அரங்கத்திற்கு மாற்றப்படுகின்றன.
மேலும், நாமக்கல் கவிஞர் மாளிகையின் 1, 3, 5, 7 மற்றும் 8-வது தளங்களில் உள்ள கூட்ட அரங்குகளை உடனடியாக பொதுப்பணித் துறையிடம் ஒப்படைக்குமாறு சம்பந்தப்பட்ட துறைகளின் உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள மதிப்புமிக்க பொருட்களை பாதுகாப்பாக அகற்றியும் பாதுகாத்தும் வைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: திமுகவை பழிவாங்குவதே தவெகவின் ஒரே பணியாக உள்ளது.. உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு!
பொதுப்பணித் துறையின் உதவி செயற்பொறியாளர் (கட்டடங்கள்), இடமாற்றம் செய்யப்பட்ட அலுவலகங்களுக்கு தேவையான மேஜை, நாற்காலி உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்குமாறும், உதவி செயற்பொறியாளர் (மின்சாரம்) புதிய அலுவலகங்களில் மின்சார வசதிகளை உடனடியாக ஏற்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
அதேபோல், பொதுத்துறையின் அலுவலக நடைமுறை-II பிரிவு புதிய இடங்களில் இணைய வசதி ஏற்படுத்தவும், தொலைபேசி பிரிவு ஏற்கனவே இருந்தபடி தொலைபேசி வசதிகளை ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த இடமாற்றங்கள் அனைத்தும் உடனடியாக நடைமுறைக்கு வரும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.