இஸ்லாமாக மாறிய ஒருவருக்கு முஸ்லிம் லெப்பாய்’ சமூகச் சான்றிதழ் வழங்க முடியாது.. அரசாணை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்த உயர்நீதிமன்றம் கிளை..
நீதிமன்றத் தீர்ப்புகளை நிர்வாக உத்தரவுகள் மூலம் மாற்ற முடியாது என்றும், மதமாற்றத்தின் மூலம் குறிப்பிட்ட சமூக அடையாளத்தைப் பெற முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், லெப்பாய், ராவுத்தர், மரக்காயர் உள்ளிட்ட சமூகங்கள் பிறப்பின் அடிப்படையில் உருவான சமூகங்கள் என்றும் சுட்டிக்காட்டினர்.
ஜூலை 8, 2026: இஸ்லாமுக்கு மதம் மாறிய ஒருவருக்கு, பிறப்பின் அடிப்படையில் வழங்கப்படும் “முஸ்லிம் லெப்பாய்” உள்ளிட்ட குறிப்பிட்ட முஸ்லிம் சமூகச் சான்றிதழ்களை வழங்க முடியாது என்றும், அதற்கு வழிவகுத்த தமிழக அரசின் அரசாணை சட்டவிரோதமானது என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு தீர்ப்பளித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பரமசிவம் என்பவர், 2015-ஆம் ஆண்டு இஸ்லாமைத் தழுவி தனது பெயரை சமீர் அகமது என மாற்றிக் கொண்டார். பின்னர், “முஸ்லிம் லெப்பாய்” சமூகச் சான்றிதழ் வழங்கக் கோரி விண்ணப்பித்தார். அவரது விண்ணப்பத்தை வருவாய்த் துறையினர் நிராகரித்ததைத் தொடர்ந்து, அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்தார்.
உயர்நீதிமன்றம் சொன்ன கருத்து:
இந்த வழக்கை நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், “ஒருவர் இஸ்லாமுக்கு மதம் மாறியவுடன் அவர் ஒரு முஸ்லிமாக மட்டுமே கருதப்படுவார். லெப்பாய், ராவுத்தர், மரக்காயர், ஷேக், சையத் போன்ற குறிப்பிட்ட முஸ்லிம் சமூகங்களின் உறுப்பினராக மதமாற்றத்தின் மூலம் ஆக முடியாது” என்று தெரிவித்தனர்.
மேலும் படிக்க: ரேஷன் கார்டில் திருத்தம் செய்வது ஈசி.. ஜூலை 11- இல் நடக்கும் பிரம்மாண்ட முகாம்.. முழு விவரம் உள்ளே!
மேலும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியல் சாதியினர் உள்ளிட்ட பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் இஸ்லாமுக்கு மதம் மாறினால், அவர்களுக்கு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் சமூகச் சான்றிதழ் வழங்கலாம் என தமிழக அரசு 2024 மார்ச் 9-ஆம் தேதி வெளியிட்ட அரசாணை எண் 31, ஏற்கனவே உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளுக்கு முரணானது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
அரசாணை செல்லாது:
நீதிமன்றத் தீர்ப்புகளை நிர்வாக உத்தரவுகள் மூலம் மாற்ற முடியாது என்றும், மதமாற்றத்தின் மூலம் குறிப்பிட்ட சமூக அடையாளத்தைப் பெற முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், லெப்பாய், ராவுத்தர், மரக்காயர் உள்ளிட்ட சமூகங்கள் பிறப்பின் அடிப்படையில் உருவான சமூகங்கள் என்றும் சுட்டிக்காட்டினர்.
மேலும் படிக்க: இடைத்தேர்தலுக்கான லாபம்.. திரை கவர்ச்சியில் பலியானவர்களின் குடும்பத்துக்கு அரசு வேலையா? கொதித்தெழுந்த சீமான்!
இதையடுத்து, மனுதாரருக்கு “முஸ்லிம் லெப்பாய்” சமூகச் சான்றிதழ் வழங்க முடியாது என்றும், இஸ்லாமுக்கு மதம் மாறிய ஒருவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம் என்ற தகுதியைக் கோர முடியாது; அவர் ஒரு முஸ்லிம் மட்டுமே என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. அத்துடன், இந்தச் சான்றிதழ் வழங்குவதற்கு அடிப்படையாக இருந்த தமிழக அரசின் அரசாணை எண் 31-ஐ செல்லாது என அறிவித்து, வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.