திருச்சி ஐஜி பங்களா எதிரே கொடூரம்.. பேச மறுத்த காதலி மீது கல்லால் கொலை வெறி தாக்குதல்.. காதலன் அதிரடி கைது!
Trichy Young Woman Brutally Attacked : திருச்சியில் ஐஜி. பங்களா எதிரே உள்ள பூங்காவில் காதலி பேச மறுத்த காரணத்தால் அவரை காதலன் துப்பட்டாவால் கழுத்தை நெறித்து கல்லால் கொடூரமான முறையில் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டம், பரமக்குடி முத்து விஜயபுரத்தை சேர்ந்தவர் வியாகுல நவீன் ( 23 வயது). இதே மாவட்டம் சாலக்குடியை சேர்ந்தவர் அமலா வெர்ஜினா (23 வயது). இருவரும் திருச்சி மாவட்டம், சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தூய வளனார், புனித சிலுவை கல்லூரியில் படித்து வந்தனர். இருவரும் ஒரே பேருந்தில் கல்லூரி சென்று வந்த நிலையில், பழக்கம் ஏற்பட்டு, காதலித்து வந்துள்ளனர். தற்போது, அமலா வெர்ஜினா ஒமேகா நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக வியாகுல நவீனை சந்திப்பதை அமலா வெர்ஜினா தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, பலமுறை வியாகுல நவீன் பேச முயன்றும் அமலா பேசவில்லை என்று தெரிகிறது. மேலும், உன்னிடம் கார், பைக் இருக்கிறதா என்று அமலா கேட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை ( மே 17- ஆம் தேதி) அமலா, நவீன் ஆகிய இருவரும் திருச்சி ரேஸ் கோர்ஸ் சாலையில் ஐஜி பங்களா எதிரே நடைபாதையில் உள்ள பூங்காவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது.
காதலியின் கழுத்தை துப்பட்டாவாலி நெறித்து கொடூர தாக்குதல்
அப்போது, அவர்களிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானதாக கூறப்படுகிறது. இதில், ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற வியாகுல நவீன், அமலாவை சரமாரியாக தாக்கியதுடன் அருகில் கிடந்த கல்லாலும் கொடூரமான முறையில் தாக்கி உள்ளார். மேலும், அமலாவின் துப்பட்டாவால் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டதாக தெரிகிறது.
மேலும் படிக்க: காவிரி ஆற்றில் மூழ்கி 3 பேர் பரிதாப பலி.. மீன்பிடி வலையில் கால் சிக்கியதால் விபரீதம்?




காதலனை சுற்றி வளைத்து பிடித்த போலீசார்
இதில், வலி தாங்க முடியாமல் வெர்ஜினா சத்தம் போட்ட நிலையில், அருகில் நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் மற்றும் ஐஜி பங்களாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சம்பவ இடத்துக்கு ஓடி வந்தனர். அப்போது, அமலா மீது கொடூர தாக்குதலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வியாகுல நவீனை சுற்றி வளைத்து பிடித்து தர்ம அடி கொடுத்து கே. கே. நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும், கொடூர தாக்குதலில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த அமலாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அமலாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஒரே சமூகத்தை சேர்ந்த காதலன் – காதலி
இந்த சம்பவம் தொடர்பாக கே.கே. நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் வியாகுல நவீன் மற்றும் அமலா வெர்ஜினா ஆகிய இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதும், தன்னை காதலித்து விட்டு ஏமாற்ற முயன்றதால் அந்த பெண்ணை கொடூரமாக தாக்கியதும் தெரிய வந்தது.
மேலும் படிக்க: மதுரை அருகே பயங்கர சாலை விபத்து… ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி.. கோயிலுக்கு சென்று திரும்பிய போது சோகம்!