மதுரை அருகே பயங்கர சாலை விபத்து… ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி.. கோயிலுக்கு சென்று திரும்பிய போது சோகம்!
Madurai Car Accident 5 Died: மதுரை மாவட்டத்தில் சாலையோர தடுப்பு கட்டை மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சமயபுரம் கோயிலுக்கு சென்று விட்டு திரும்பிய போது இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சென்னை மாவட்டத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 60). இவரது மனைவி ஆஷா (58). இவர்களது குடும்பத்தினரான சுலோச்சனா (72), வசந்தா (90) பிரகாஷ் (76) ஆகிய 5 பேரும் ஒரே காரில் திருச்சி சமயபுரம் கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர். காரை வெங்கடேஷ் ஓட்டியதாக கூறப்படுகிறது. அங்கு கோயிலில் தரிசனம் முடித்து விட்டு அதே காரில் அனைவரும் ஊர் திரும்பி கொண்டிருந்தனர். இந்த காரானது மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே உள்ள அய்யம்பட்டி விளக்கு பகுதியில் அதிவேகத்தில் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த காரானது சாலையின் ஓரம் அமைக்கப்பட்டிருந்த பக்கவாட்டு சுவரில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், காரின் முன் பகுதி அப்பளம் போல நொறுங்கியது. இதனால், காரின் உள்ளே இருந்த 5 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.
சாலையின் பக்கவாட்டு சுவர் மீது மோதிய கார்
இந்த விபத்தில் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கிய ஐந்து பேரில் உடல் பாகங்கள் பலத்த சேதம் அடைந்திருந்தது. மேலும், ரத்த வெள்ளத்தில் அனைவரும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இந்த விபத்தை பார்த்த அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் காரில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், இடிபாடுகளில் சிக்கியவர்களை எளிதாக மீட்க முடியவில்லை. பின்னர், இந்த விபத்து தொடர்பாக அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
மேலும் படிக்க: நெல்லையில் கொடூரத்தின் உச்சம்.. குழந்தை கண் முன்னே தாய் வெட்டி படுகொலை.. மர்ம நபர்கள் வெறிச்செயல்..!




அடுத்தடுத்து உயிரிழந்த குடும்பத்தினர்
அதன் பேரில், போலீசார் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கடப்பாறை உள்ளிட்ட கருவிகளால் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அனைவரும் மீட்கப்பட்டு அவசர ஆம்புலன்ஸ் மூலமாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், ஐந்து பேரும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து அனைவரது சடலங்களும் மேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும், இந்த விபத்து சம்பவம் தொடர்பாக கொட்டாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலையின் தடுப்பு சுவர் மீது கார் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தால் அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர், பொக்லைன் இயந்திரம் மூலமாக விபத்துக்குள்ளான கார் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சரி செய்யப்பட்டது.
மேலும் படிக்க: காவிரி ஆற்றில் மூழ்கி 3 பேர் பரிதாப பலி.. காப்பாற்ற சென்றவரும் உயிரிழப்பு!