காவிரி ஆற்றில் மூழ்கி 3 பேர் பரிதாப பலி.. மீன்பிடி வலையில் கால் சிக்கியதால் விபரீதம்?
Erode Cauvery River : ஈரோடு மாவட்டத்தில் காவிரி ஆற்றில் குளிக்க சென்றவர்கள் உள்பட மூன்று பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ஆற்றில் தவறி விழுந்தவரை காப்பாற்ற சென்றவரும் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு பெண்கள் ஆவர்.
ஈரோடு மாவட்டம், பாரசூரில் காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள தடுப்பணையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் குளிப்பதற்காக சென்றனர். இதில், ஒரு பெண் மட்டும் ஆற்றின் உள்ளே இறங்கியதாக தெரிகிறது. இதில், அவர் எதிர்பாராத விதமாக கால் தவறி ஆற்றின் உள்ளே விழுந்துள்ளார். அப்போது, ஆற்றின் உள்ளே மீன்கள் பிடிப்பதற்காக போடப்பட்டுள்ள வலையில் அந்த பெண்ணின் கால் சிக்கியதாக கூறப்படுகிறது. இதனால், அந்த பெண்ணால் நீச்சல் அடிக்க முடியாமல் தண்ணீரில் தத்தளித்துள்ளார். உடனே விபரீதத்தை உணர்ந்த அருகில் இருந்த மூவரும் அந்த பெண்ணை காப்பாற்றுவதற்காக ஆற்றின் உள்ளே இறங்கி உள்ளனர். இதில், அவர்களும் மீன்பிடி வலையில் சிக்கி ஆற்று நீரில் தத்தளிக்க தொடங்கினர். இதை பார்த்த அருகில் குளித்துக் கொண்டிருந்த நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பெருமாள் என்பவர் அவர்களை மீட்க முயன்றார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட 4 பேர்
ஆனால், அவரால் மீட்க முடியவில்லை. இதுகுறித்து அருகில் உள்ள காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் மூழ்கிய நபர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில், ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார். சிறிது நேரத்துக்கு பிறகு மீதமுள்ள மூவரும் மீட்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, நான்கு பேரும் அவசர ஆம்புலன்ஸ் மூலமாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மேலும் படிக்க: புதுச்சேரியில் அமைச்சர் பதவிக்கு ரூ.150 கோடி பேரம்.. முன்னாள் முதல்வர் நாராயணசாமி பரபரப்பு குற்றச்சாட்டு!




அடுத்தடுத்து உயிரிழந்த 3 பேர்
ஆனால், செல்லும் வழியில் இரு பெண்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். மருத்துவமனையில் மீதமுள்ள இருவர் அனுமதிக்கப்பட்ட நிலையில், மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதில், ஒரு ஆண் நபர் பரிதாபமாக உயிரிழந்தார். மீதமுள்ள ஒருவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த மூன்று பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் உயிரிழந்தவர்களின் விவரம் தெரியவந்தது.
உயிரிழந்தவர்களின் விவரம் தெரியவந்தது
இதில், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த செல்லதுரை (45 வயது). தனியார் நிறுவன ஊழியர். பாரதி (30 வயது). பிரதீபா (20 வயது) ஆகிய மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மீதமுள்ள ஒருவர் குறித்த தகவல் உடனடியாக தெரியவில்லை. அவர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: அதிமுக எம்எல்ஏக்களுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்படுமா? கே.ஏ.செங்கோட்டையன் அளித்த பதில்!