கிளாண்டர்ஸ் நோய் தொற்று.. 140 குதிரைகளுக்கு அவசர ரத்த பரிசோதனை.. கால்நடைத்துறை எச்சரிக்கை!
Glanders Infection 140 Horses Blood Sample Test: சென்னையில் கிளாண்டா நோய் தொற்றால் குதிரை உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 140 குதிரைகளுக்கு ரத்த மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், நோயின் தீவிரம் குறித்து கால்நடைத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னையில் திருமண நிகழ்ச்சிகள் மற்றும் மெரினா கடற்கரைக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் சவாரி செய்வதற்காக குதிரைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த குதிரை சவாரியானது மெரினா கடற்கரையில் சுற்றுலா பயணிகள் மத்தியில் பிரபலமானதாக இருந்து வருகிறது. இதன் காரணமாக குதிரை சவாரி செய்வதற்கென பிரியர்கள் உள்ளனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் சனிக்கிழமை ஒரு குதிரைக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தது. உடனடியாக கால்நடை மருத்துவர்கள் அந்த குதிரையை பரிசோதனை செய்ததில் கிளாண்டர்ஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து, அந்த குதிரையுடன் தொடர்பில் இருந்த மற்ற குதிரைகளை தனிமைப்படுத்தவும், அந்த குதிரைகளுக்கும் ரத்த மாதிரி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று கால்நடை பராமரிப்புத்துறை அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தது.
140 குதிரைகளுக்கு கிளாண்டர்ஸ் நோய் தொற்று பரிசோதனை
இந்த நிலையில், சைதாப்பேட்டையில் உள்ள கால்நடை பன்முக மருத்துவமனையின் நோய் நிகழ்வியல் பிரிவு மருத்துவக் குழுவினர் சுமார் 140 குதிரைகளுக்கு ரத்த மாதிரிகளை சோதனைக்காக எடுத்துள்ளனர். சேப்பாக்கம் ரயில் நிலையம் அருகே வளர்க்கப்பட்டு வரும் குதிரைகளுக்கு சைதாப்பேட்டை அரசு கால்நடை பராமரிப்பு துறையினர் ரத்த மாதிரிகளை சேகரித்துள்ளனர். இந்த ரத்த மாதிரிகள் ஆய்வகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளன. இதில், கிடைக்கும் முடிவுகளின் அடிப்படையில் எந்த குதிரைக்கும் கிளாண்டர்ஸ் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளதா என்பது தெரியவரும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும் படிக்க: நெல்லையில் கொடூரத்தின் உச்சம்.. குழந்தை கண் முன்னே தாய் வெட்டி படுகொலை.. மர்ம நபர்கள் வெறிச்செயல்..!




கிளாண்டர்ஸ் தொற்று மனிதர்களுக்கும் பரவும் தன்மை உடையது
கிளாண்டர்ஸ் நோய்த் தொற்று என்பது குதிரைகள் மற்றும் கழுதைகளுக்கு பரவும் பாக்டீரியா ஆகும். இது விலங்குகளுக்கு மட்டும் இன்றி மனிதர்களுக்கும் பரவக்கூடிய நோயாகும். இந்த நோயானது எளிதில் பரவக்கூடிய தன்மை உடையது. இதன் காரணமாக மரணத்தையும் ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். மேலும், கிளாண்டர்ஸ் நோய் தொற்றால் தமிழக முழுவதும் கண்காணிப்பை தீவிரபடுத்தவும், கால்நடைத்துறை தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இதே போல, கிளாண்டர்ஸ் நோய் தொற்றால் உயிரிழந்த குதிரையை பராமரித்தவர்களையும் உடல் நல பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட கால்நடை துறைக்கு எச்சரிக்கை விடுப்பு
இதனால், குதிரைகள் பராமரிக்கும் பகுதிகளில் வசிப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், விலங்குகளுக்கு ஏதேனும் உடல் நலக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் கால்நடைகள் தீவிர கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. இது தொடர்பாக மாவட்ட கால்நடை துறைக்கும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: முதல்வர் விஜய்யின் கேரள பயணம் ரத்து? சதீசன் பதவியேற்பு விழாவில் பங்கேற்கவில்லை!