காங்கிரஸ் அணுகுமுறையால் கூட்டணி கட்சிகள் அதிருப்தி… இண்டி கூட்டணி கூட்டத்தில் திருமாவளவன் குற்றச்சாட்டு!
Vck Leader Thol.Thirumavalavan: காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறையால் கூட்டணி கட்சிகள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் குற்றச்சாட்டை முன் வைத்தார். டெல்லியில் நடைபெற்ற இண்டி கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் இந்த கருத்தை முன் வைத்திருந்தார்.
டெல்லியில் இண்டி கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று திங்கள்கிழமை ( ஜூன் 8- ஆம் தேதி) நடைபெற்றது. இந்த கூட்டத்தை திராவிட முன்னேற்ற கழகம் புறக்கணித்த நிலையில் சுமார் 25 கட்சிகள் பங்கேற்றன. இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் திருமாவளவன் எடுத்துரைத்த கருத்துக்களை தனது தள எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதன்படி, இண்டி கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் திருமாவளவன் பேசியதாவது: பாரதிய ஜனதா கட்சி அரசின் தவறான அணுகுமுறை காரணமாக இந்திய மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகி உள்ளது. அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் வினாத்தாள் கசிவு காரணமாக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மீண்டும் நடத்தப்படுகின்றன. இதில், பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்திருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கல்வித்துறை அமைச்சர் மெளனமாக இருக்கிறார்
இதன் காரணமாக லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இந்த விவகாரத்துக்கு பாஜக அரசில் எவருமே பொறுப்பேற்கவில்லை. இதற்கு தார்மீக பொறுப்பேற்க வேண்டிய மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மௌனமாக இருந்து வருகிறார். இதன் காரணமாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தன்னெழுச்சியாக போராட்டங்களை நடத்தி உள்ளனர். இது அரசியல் கட்சிகள் அனைவருக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை மணி ஆகும். இளைஞர்களுடைய பிரச்சினைகளுக்காக நாம் தெருவில் இறங்கி போராட காரணத்தால் தான் இந்த நிலை உருவாகியுள்ளது.
மேலும் படிக்க: பழனி முருகன் கோயிலில் அதிரடி ஆய்வு.. அதிகாரிகளை லெப்ட் ரைட் வாங்கிய அமைச்சர் ரமேஷ்.. விழிபிதுங்கி நின்றனர்!




நாட்டில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி
இளைஞர்களின் குரலை வெளிப்படுத்துகிற காக்ரோச் ஜனதா பார்ட்டி என்ற அமைப்பை நாம் எதிர் நிலையில் வைத்து பார்க்க கூடாது. அவர்கள் குறிப்பிடும் பிரச்சனைகளை விரிவான தளத்தில் இண்டி கூட்டணி முன்னெடுக்க வேண்டும். இதற்காக நாடு தழுவிய போராட்டத்தை நாம் அறிவிக்க வேண்டும். பிரதமர் மோடியின் தவறான வெளியுறவுக் கொள்கை காரணமாக நாடு திவாலகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்க தெரியாத பிரதமர் மக்களை சிக்கன நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்துகிறார். கொரோனா காலத்தில் எவ்வளவு பொதுமக்கள் உயிரிழந்தார்களோ, அதேபோல தற்போதும் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது.
கூட்டணி கட்சிகள் மத்தியில் அதிருப்தி
இதற்கு எதிராக போராட்டத்தை மேற்கொள்வதுடன், இதற்காக எதிர்க்கட்சிகள் புரிந்துணர்வும், ஒற்றுமையும் அவசியமாகும். கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸின் அணுகுமுறையால் இண்டி கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழகம், கேரளம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் திரிணாமுல், மார்க்சிஸ்ட், திமுக ஆகிய கட்சிகள் பலவீனம் அடைந்துள்ளதாக குற்றச்சாட்டை முன் வைத்தார்.
மேலும் படிக்க: பொம்மை, பொம்மை, பொம்மை பார்! ஜோசப் விஜய் எனும் முதல்வர் பொம்மை பார் – நயினார் நாகேந்திரன் சாடல்..