தந்தை கண்முன்னே சோகம்.. திருவண்ணாமலை அருகே தனியார் பேருந்து மோதி விபத்து.. கல்லூரி மாணவி பரிதாப பலி!
Tiruvannamalai College Student Dies: திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிவேகமாக வந்த தனியார் பேருந்து மோதிய விபத்தில் தந்தையுடன் பைக்கில் சென்று கொண்டிருந்த கல்லூரி மாணவி துடிதுடிக்க பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக பேருந்து ஓட்டுநரை கைது செய்து செய்யாறு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியை சேர்ந்தவர் துர்கா தேவி. இவர், இதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டப் படிப்பு படித்து வந்தார். இந்த நிலையில், மாணவி துர்கா தேவி வழக்கம் போல இன்று சனிக்கிழமை ( ஜூலை 25- ஆம் தேதி) காலை தனது தந்தையுடன் பைக்கில் கல்லூரிக்கு புறப்பட்டு சென்றார். செய்யாறு அருகே உள்ள ஒரு சாலையில் அவர்கள் இருவரும் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அதே சாலையில் தனியார் பேருந்து ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. இதில், எதிர்பாராத விதமாக துர்கா தேவி சென்ற பைக் மீது அந்த பேருந்து வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், பைக்கில் இருந்து துர்கா தேவி மற்றும் அவரது தந்தை ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர். இதில், அவர்கள் மீது பேருந்து சக்கரம் ஏறி இறங்கியது.
பேருந்து மோதியதில் மாணவி பலத்த காயம்
இதில், பலத்த ரத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர். இதனை, அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து உடனடியாக அவர்களை மீட்டு அவசர ஆம்புலன்ஸ் மூலமாக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, மாணவி துர்கா தேவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த துர்கா தேவியின் குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் குவிந்தனர். அப்போது, அவரது சடலத்தை பார்த்து அவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
மேலும் படிக்க: திருவள்ளூரில் மீண்டும் அமோனியா வாயு கசிவு.. இருவரின் நிலை என்ன? பெரும் பீதியில் பொதுமக்கள்!




தனியார் பேருந்து ஓட்டுநர் கைது – விசாரணை
அவரது தந்தை அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மாணவியின் சடலம் பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக துர்கா தேவியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், செய்யாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்தின் ஓட்டுனரை கைது செய்து அவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகம்
கல்லூரிக்கு தனது தந்தையுடன் பைக்கில் சென்ற மாணவி தறிகெட்டு ஓடிய தனியார் பேருந்து மோதியதில் தந்தை கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அவர்கள் குடும்பத்தினர் மத்தியிலும், அந்தப் பகுதியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. செய்யாறு பகுதியில் நிகழ்ந்த இந்த திடீர் விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது, போலீசார் விபத்துக்குள்ளான பேருந்து மற்றும் இருசக்கர வாகனத்தை மீட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் படிக்க: மதுரையில் கார் டயர் வெடித்து விபரீதம்.. பரிதாபமாக பறிபோன இரு உயிர்கள்.. தீவிர சிகிச்சையில் 4 பேர்!