கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையை முன்னிட்டு மும்பையில் பல்வேறு இடங்களில் தஹி ஹண்டி கொண்டாட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், லோக்கல் ரயிலில் பெண்கள் பயணிகள் தஹி ஹண்டி உடைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ, பத்லாபூர் முதல் தானே செல்லும் லோக்கல் ரயிலில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. காலை சுமார் 7.56 மணிக்கு பத்லாபூரில் இருந்து புறப்பட்ட ரயில் என தகவல்கள் வெளியாகியுள்ளன. வழக்கமாக மும்பையின் பல்வேறு பகுதிகளில் தஹி ஹண்டி விழாவின்போது மனித பிரமிட் அமைத்து உறியடிப்பது வழக்கம். ஆனால், இந்த பெண்கள் தங்களது காலை நேர ரயில் பயணத்தையே கொண்டாட்டமாக மாற்றியுள்ளனர். வைரலான வீடியோவில், ரயிலின் மேல் பகுதியில் உள்ள கைப்பிடிகளில் தஹி ஹண்டி கட்டித் தொங்கவிடப்பட்டுள்ளது.