வேலூரில் கொடூரம்… தேவாலய கட்டுமான பணியில் விபத்து.. 3 தொழிலாளர்கள் பரிதாப பலி!
Vellore Church Collapses 3 Killed : வேலூர் மாவட்டத்தில் தேவாலய கட்டுமான பணியின் போது, முதல் தளம் சரிந்து விழுந்ததில் 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 9 பேர் சேர்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .
வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே உள்ள மஞ்சு கிருஷ்ணாபுரம் பகுதியில் புதிதாக தேவாலயம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. தமிழகம்- ஆந்திரா எல்லை பகுதியில் நடைபெற்று வரும் தேவாலய கட்டுமான பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இவர்கள், இன்று வியாழக்கிழமை மாலை கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில், தேவாலயத்தின் முதல் தளத்தில் சாரம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. அப்போது, திடீரென தேவாலயத்தின் முதல் தளம் இடிந்து விழுந்தது. இதில், சுமார் 12 கட்டட தொழிலாளர்கள் சிக்கியதாக தெரிகிறது. இந்த விபத்து குறித்து அறிந்த அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து தொழிலாளர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், இது தொடர்பாக காட்பாடி காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அடுத்தடுத்து உயிரிழந்த 3 தொழிலாளர்கள்
அதன் அடிப்படையில், போலீசார், தீயணைப்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர். இதில், 12 பேரும் மீட்கப்பட்டு அவசர ஆம்புலன்ஸ் மூலமாக அருகில் உள்ள சேர்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியில் ஒருவர் உயிரிழந்தார். மற்றவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். மீதமுள்ள 10 தொழிலாளர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதில், சிகிச்சை பலன் இன்றி மேலும் ஒரு தொழிலாளி பரிதாபமாக உள்ளார். இதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3- ஆக உயர்ந்தது.
மேலும் படிக்க: சிவகங்கை அஜித்குமார் லாக்கப் மரணம்.. டிஎஸ்பி உள்பட 4 போலீசார் மீது கொலை வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு!




பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அச்சம்
மற்றவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், உயிரிழப்பு மேலும் அதிகரிக்க கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காட்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்துக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர். சம்பவ இடத்தில் கட்டட இடுப்பாடுகளுக்குள் வேறு யாரேனும் சிக்கி உள்ளனரா என தேசிய பேரிடர் மீட்பு படையினர் நவீன உபகரணங்களுடன் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
வேலூர் மாவட்ட ஆட்சியர்- எம்எல்ஏ ஆய்வு
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வேலூர் மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ் மற்றும் காட்பாடி எம்எல்ஏ சுதாகர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். தேவாலய கட்டுமான பணியின்போது, நிகழ்ந்த கொடூர விபத்தும், உயிரிழப்பும் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்தவர்களின் விவரம் உடனடியாக தெரியவரவில்லை.
மேலும் படிக்க: கர்ப்பிணி – சிசு உயிரிழந்த கொடூர சம்பவம்.. மர வியாபாரி மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு.. காஞ்சிபுரம் போலீஸ் அதிரடி!