சிவகங்கை அஜித்குமார் லாக்கப் மரணம்.. டிஎஸ்பி உள்பட 4 போலீசார் மீது கொலை வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Sivaganga Ajith Kumar Custodial Death : சிவகங்கை மாவட்டத்தில் கோவில் காவலாளி அஜித்குமார் காவல் மரணத்தில் தொடர்புடையதாக சிபிஐ அதிகாரிகள் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிவகங்கை மாவட்டத்தில் மடப்புரம் கோவில் காவலாளி லாக்கப் மரண வழக்கில் 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், மடப்புரத்தில் காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில், அஜித் குமார் என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த கோவிலுக்கு வந்த பக்தர் ஒருவரின் நகையை திருடியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், கோவில் காவலாளி அஜித் குமாரை தனிப்படை போலீசார் கொடூரமான முறையில் அடித்து கொலை செய்திருந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், திருப்புவனம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த ராஜா, பிரபு, கண்ணன், ஆனந்த், சங்கர மணிகண்டன், ராமச்சந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
டிஎஸ்பி உள்பட 4 போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு
இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், மதுரை மாவட்ட 5- ஆவது கூடுதல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பான விசாரணை இன்று வியாழக்கிழமை நடைபெற்ற நிலையில், குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள
- மானாமதுரை சரக டிஎஸ்பி சண்முகசுந்தரம்.
- திருபுவனம் காவல் ஆய்வாளர் ரமேஷ் குமார்.
- உதவி ஆய்வாளர் சிவக்குமார்.
- தலைமை காவலர் இளையராஜா
4 போலீசாரும் கைது செய்ய இருப்பதாக தகவல்
ஆகிய 4 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யுமாறு நீதிபதி தாமோதரன் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து, 4 போலீசாரும் நீதிமன்றத்தில் அமர வைக்கப்பட்டனர். தொடர்ந்து, அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. சிபிஐ அதிகாரிகள் சமர்ப்பித்த குற்றப்பத்திரிக்கையின் அடிப்படையில், மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில், மானாமதுரை காவல் துணை கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.




மேலும் படிக்க: “தற்குறிகளுக்கு மிசா கைதின் வலிகள் தெரியாது” முதல்வரை கடுமையாக விமர்சித்த திமுக ஐடி விங்!
காவலாளி லாக்கப் மரணத்தின் பின்னணி
மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் நகை திருடியதாக கோவிலுக்கு தனது தாயுடன் வந்திருந்த நிகிதா என்ற பெண் வாய்மொழியாக புகார் அளித்ததாக கூறப்படுகிறது. அத்துடன், அவருக்கு நெருக்கமான ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் கொடுத்த அழுத்தத்தின் அடிப்படையில் சிவகங்கை மாவட்ட எஸ்பி.யின் தனிப்படை போலீசார் மற்றும் திருப்புவனம் காவல் நிலைய போலீசார் ஆகியோர் அஜித் குமாரை கைது செய்து அழைத்து சென்று கொடூரமான முறையில் தாக்கியிருந்தனர்.
போலீசார் தாக்கும் கொடூரமான காட்சிகள்
தொடர்ந்து, அவரை மடப்புரம் கோவிலின் பின்பகுதிக்கு அழைத்துச் சென்று கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கொடூரமாக தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் தான், குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள டிஎஸ்பி உள்ளிட்ட 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: நெல்லையில் 10 வயது மகள் கண்முன்னே தந்தை கொடூர கொலை.. 4 பேர் கும்பல் வெறிச்செயல்.. இருவரை கைது செய்த தனிப்படை!