தூத்துக்குடியில் கொடூரம்.. மாமனாரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய மருமகன்.. 6 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது!
Thoothukudi Murder 6 Arrested : தூத்துக்குடி மாவட்டத்தில் கணவன், மனைவி தகராறில் மாமனாரை வெட்டி கொலை செய் த வழக்கில் மருமகன் உள்ளிட்ட 6 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் .
தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரம், அருகே உள்ள வேலாயுத நகர் 2- ஆவது தெருவை சேர்ந்தவர் முனியசாமி ( 45 வயது). இவரது மகள் வைஷ்ணவி. இவருக்கும், மதுரை மாவட்டம், அவனியாபுரத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான முருகன் ( 27 வயது) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், தம்பதி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், முனியசாமி தனது மகள் வைஷ்ணவியை பார்ப்பதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அவனியாபுரம் சென்றிருந்தார். அப்போது, அவர்களிடையே ஏற்பட்ட வாய்த்தகராறில் மாமனார் முனியசாமியை, மருமகன் முருகன் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், கோபம் அடைந்த முனியசாமி, தனது மகள் வைஷ்ணவியை அழைத்துக் கொண்டு தூத்துக்குடி சென்று விட்டார். இதனால், முருகன் கடும் ஆத்திரம் அடைந்ததாக கூறப்படுகிறது.
மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்த கணவர்
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தனது நண்பர்களிடம் கூறி முருகன் மனம் வருந்தியதுடன், நண்பர்கள் 5 பேரை அழைத்துக் கொண்டு தூத்துக்குடியில் உள்ள முனியசாமியின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு, தனது மனைவி வைஷ்ணவியை தன்னுடன் குடும்பம் நடத்த மதுரைக்கு அனுப்பி வைக்குமாறு முனியசாமியிடம், முருகன் மற்றும் அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு, முனியசாமி மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: பிளஸ் 2 மாணவி கூட்டு வன்கொடுமை… ஒருவருக்கு மரண தண்டனை.. நெல்லை போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
மாமனாரை வெட்டி கொலை செய்த 6 பேர் கும்பல்
இதில், ஆத்திரம் அடைந்த முருகன் மற்றும் அவரது நண்பர்கள் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் மாமனார் முனியசாமியை கொடூரமாக வெட்டி கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் திரண்ட நிலையில், அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இந்த சம்பவம் தொடர்பாக, முனியசாமியின் குடும்பத்தினர் முத்தையாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கும்பலை தேடி வந்தது.
6 பேரை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார்
இதில், போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர்,
- முருகன் மற்றும் அவரது நண்பர்களான
- மதுரையை சேர்ந்த நல்ல மன்னன் ( 24 வயது).
- தீன தயாளன் ( 22 வயது).,
- அரவிந்த் ( 25 வயது).
- பெருமாள் ( 26 வயது).
- சாயல்குடியை சேர்ந்த திருமுருகன் ( 23 வயது).
ஆகிய 6 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, அவர்களை தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் படிக்க: பூட்டிய வீட்டை நோட்டமிட்டு கைவரிசை.. சொகுசு காரில் வந்து நகை திருடிய தம்பதி கைது.. வேலூரில் அதிர்ச்சி பின்னணி!