உலகின் மிக உயரமான சிகரமான மவுண்ட் எவரெஸ்ட் பகுதியில் பனிப்பாறைகள் வேகமாக உருகி வரும் நிலையில், அதற்கு மனிதர்களின் செயல்பாடுகளும் ஒரு காரணமாக இருக்கலாம் என புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மலையேற்ற வீரர்கள், சுற்றுலாப் பயணிகள், வழிகாட்டிகள் மற்றும் அவர்களுக்கு உதவும் பணியாளர்கள் எவரெஸ்ட் பேஸ் கேம்ப் பகுதியில் கூடுகின்றனர். இதனால் அப்பகுதி ஒரு பரபரப்பான தற்காலிக குடியிருப்பாகவே மாறுகிறது. இந்த மனித நடமாட்டம், எவரெஸ்ட் சிகரத்தைச் சுற்றியுள்ள கும்பு பனிப்பாறையின் மீது கூடுதல் சுற்றுச்சூழல் தாக்கத்தை ஏற்படுத்துவதாக புதிய ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வில், பனிப்பாறை உருகுவதற்கு மூன்று முக்கிய காரணிகள் ஆராயப்பட்டுள்ளன. அதாவது, உலகளாவிய காலநிலை மாற்றம், புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாடு மற்றும் மனிதர்களின் சிறுநீர் கழிப்பதால் வெளியாகும் வெப்பம் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டுள்ளன. 2023ஆம் ஆண்டு மலையேற்ற சீசனில் எவரெஸ்ட் பேஸ் கேம்ப் பகுதியில் ஆய்வாளர்கள் நேரடியாக தரவுகளை சேகரித்துள்ளனர். அப்போது சமையல், வெப்பத்திற்காகவும் மின்சாரம் தயாரிக்கவும் பயன்படுத்தப்படும் LPG, மண்ணெண்ணெய் மற்றும் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களால் உருவாகும் வெப்பம் கணக்கிடப்பட்டது.