கடமை தாண்டிய நேர்மை.. ரயிலில் தவறவிட்ட ரூ.13.64 லட்சம் பணப்பை.. உரியவரிடம் ஒப்படைத்த செங்கோட்டை ரயில்வே போலீஸ்!
Sengottai Railway Police : சென்னை- செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் தவற விட்ட பணப் பையை சம்பந்தப்பட்ட நபரை நேரில் அழைத்து செங்கோட்டை ரயில்வே போலீசார் இன்று ஒப்படைத்தனர். இதற்கு, அந்த நபர் மனதார நன்றி தெரிவித்து சென்றார் .
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து செங்கோட்டைக்கு தினம் தோறும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று புதன்கிழமை அந்த ரயில் சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு வந்து கொண்டிருந்தது. இந்த ரயிலில் ஏராளமான பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர். இந்த ரயிலானது சிவகாசி ரயில் நிலையத்துக்கு வந்த போது, ரயிலில் பயணித்த பயணி ஒருவர் தனது பையை மறந்து விட்டு சிவகாசி ரயில் நிலையத்தில் இறங்கி சென்றுள்ளார். பின்னர், இந்த ரயிலானது அங்கிருந்து புறப்பட்டு சென்றது. அப்போது, ரயில்வே ஊழியர் ஒருவர் அந்த பயணி அமர்ந்திருந்த இருக்கையில் கேட்பாரற்ற நிலையில் இருந்த பை பார்த்து ராஜபாளையம் ரயில்வே நிலைய மேலாளருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
பயணி தவற விட்ட பையில் ரூ.13 லட்சம் காசோலைகள்
அவர், ரயிலில் பணியில் இருந்த செங்கோட்டை ரயில்வே பாதுகாப்பு படை காவலர்களான முருகன் மற்றும் மின்னு சசி ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள், ரயிலின் குளிர்சாதன வசதி உடைய பெட்டியான பி 1 -இல் 39- ஆம் நம்பர் இருக்கையில் இருந்த பையை மீட்டனர். அதில், போலீசார் ஆய்வு செய்ததில் ரூ. 23 ஆயிரத்து 500 ரொக்கம், ரூ. 13 லட்சத்து 41 ஆயிரத்து 090 மதிப்பிலான பல்வேறு வங்கிகளின் காசோலைகள், லைசென்ஸ், ரயில் முன்பதிவு செய்ததற்கா டிக்கெட் உள்ளிட்டவை இருந்தது தெரியவந்தது.
மேலும் படிக்க: காஞ்சிபுரத்தில் பணத்துக்காக பிரசவம் தடுத்து நிறுத்தம்.. தாய்-சிசு பரிதாபமாக உயிரிழப்பு.. குழந்தை வெளியேறியநிலையில் கொடூரம்!




செங்கோட்டை ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைப்பு
தொடர்ந்து, ரயிலானது செங்கோட்டை ரயில் நிலையத்தை அடைந்ததும், அந்தப் பையை செங்கோட்டை ரயில்வே காவல் நிலையத்தில் போலீசார் ஒப்படைத்தனர். பின்னர், அதில், இருந்த ஆவணங்களின் அடிப்படையில், பையை தவற விட்ட நபர் விருதுநகர் மாவட்டம், சிவகாசி, வேலாயுதம் தெருவைச் சேர்ந்த ராஜீவ் அஞ்சாலியா என்பது தெரிய வந்தது. தொடர்ந்து, அவருக்கு போலீசார் தகவல் தெரிவித்து தவற விட்ட பையை பெற்று செல்லுமாறு தெரிவித்தனர். அதன் அடிப்படையில், அவர் செங்கோட்டை ரயில்வே பாதுகாப்பு படை காவல் நிலையத்திற்கு நேரில் சென்று தான் தவறவிட்ட பையை பெற்றுக்கொள்ள சென்றார்.
சம்பந்தப்பட்ட நபரிடம் பையை ஒப்படைத்த போலீசார்
அங்கு, அவரது ஆவணங்கள் உள்ளிட்டவற்றை போலீசார் சோதனை செய்து உறுதி செய்த பின்னர், ரூ. 13 லட்சம் மதிப்பிலான காசோலைகள், ரூ. 23,500 ரொக்க பணம் உள்ளிட்டவை இருந்த பையை போலீசார் அவரிடம் ஒப்படைத்தனர். இதை தொடர்ந்து, அந்த நபர் ரயில்வே போலீசாருக்கு மனதார நன்றியை தெரிவித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
மேலும் படிக்க: விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை.. சொந்த ஊர் செல்ல திட்டமா.. தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு!