தமிழ்நாட்டில் தொடர்ந்து 4 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது – காரணம் என்ன?
Tamil Nadu Bank Holiday : வங்கி அதிகாரிகள் வேலை நிறுத்தம் மற்றும் தொடர் விடுமுறை ஆகிய காரணங்களால் தமிழ்நாட்டில் உள்ள வங்கிகள் 4 நாட்களுக்கு இயங்காது என தகவல் வெளியாகியுள்ளது . பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி செப்டம்பர் 11 அன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ள நிலையில் விநாயகர் சதுதர்த்தி உள்ளிட்ட காரணங்களால் வங்கிகள் செயல்படாது
சென்னை, செப்டம்பர் 9 : வங்கி அதிகாரிகள் வேலை நிறுத்தம் மற்றும் தொடர் விடுமுறை ஆகிய காரணங்களால் தமிழ்நாட்டில் உள்ள வங்கிகள் 4 நாட்களுக்கு இயங்காது என தகவல் வெளியாகியுள்ளது . பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி செப்டம்பர் 11, 2026 அன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இதனையடுத்து சனி, ஞாயிறு விடுமுறை மற்றும் விநாயகர் சதுர்த்தி விடுமுறை என தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள் இயங்காது.
தமிழ்நாட்டில் தொடர்ந்து 4 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது
இது தொடர்பாக பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் ஜவகர், “ஐடிபிஐ வங்கி தனியார் மயமாக்கல், வாரத்தில் 5 நாட்கள் வேலை உள்ளிட்ட ஐந்து அம்சக் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி வரும் செப்டம்பர் 11, 2026 அன்று ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். எங்களின் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றாத பட்சத்தில் வரும் செப்டம்பர் 29, 2026, செப்டம்பர் 30, 2026 ஆகிய 2 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவிப்போம் என்றார்.
இதையும் படிக்க : காட்டை காக்க வேண்டிய வனத்துறை அதிகாரி செய்த காரியம்.. உடுமலைப்பேட்டையில் சிக்கிய யானை தந்தம்.. 3 பேருக்கு கைவிலங்கிட்ட போலீஸ்!




மேலும், பொதுத்துறை வங்கி அதிகாரிகளுக்கான செயல்திறன் சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தை ஒன்றிய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இத்திட்டத்தின் தற்போதைய கட்டமைப்புக்கு வங்கி ஊழியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. மேலும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு, 2025-26 ஆம் ஆண்டுக்கான இத்திட்டத்தைச் செயல்படுத்தும் முடிவை உடனடியாக நிறுத்தி வைப்பதாக நிதியமைச்சகம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் வாரத்தில் 5 நாட்கள் வேலை மற்றும் இரண்டு நாட்கள் விடுமுறை, ஓய்வூதியத் திருத்தம் போன்ற முக்கிய விவகாரங்கள் இன்னும் நிலுவையில் உள்ளதால் வங்கி ஊழியர் சங்கங்கள் தங்கள் வேலை நிறுத்தத்தை திட்டமிட்டப்படி நடத்த உள்ளோம். மேலும் ஐடிபிஐ வங்கியின் பங்குகளின் மதிப்பைக் குறைத்து விற்பனை செய்வதால் பெரும் இழப்பு எல்ஐசி நிறுவனத்திற்கு ஏற்படும்.
இதையும் படிக்க : இனி சிலிண்டர் புக்கிங்கிற்கு 45 நாட்கள் வேண்டாம்.. சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு இடைவெளி 25 நாட்களாக குறைப்பு!
மத்திய அரசு, ஐடிபிஐ வங்கியின் பங்குகளை 51 சதவிகிதத்திற்கு குறையாமல் வைத்துக் கொள்வோம் என கூறியுள்ளது. ஆனால் ஒன்றிய அரசும், எல்ஐசியும் இணைந்து 60 சதவிகிதம் பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்ய முயற்சிக்கிறது. எனவே இந்த வங்கியின் பங்குகளைத் தனியாருக்கு விற்பனை செய்யக்கூடாது” என வலியுறுத்தினார். மேலும் வரும் செப்டம்பர் 11, 2026 அன்று வங்கி அதிகாரிகள் வேலை நிறுத்தத்தால் அன்றைய தினம் வங்கிகள் இயங்காது. அதேபோல், செப்.12- ஆம் தேதி இரண்டாவது சனிக்கிழமை, செப்.13- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, செப்.14- ஆம் தேதி திங்கட்கிழமை விநாயகர் சதுர்த்தி விடுமுறை என தொடர்ந்து நான்கு நாட்கள் வங்கிகள் இயங்காது என்பது குறிப்பிடத்தக்கது.