காட்டை காக்க வேண்டிய வனத்துறை அதிகாரி செய்த காரியம்.. உடுமலைப்பேட்டையில் சிக்கிய யானை தந்தம்.. 3 பேருக்கு கைவிலங்கிட்ட போலீஸ்!
Tiruppur Forest Official Arrested : திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை வனப்பகுதியில் கடத்தி வரப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்த யானை தந்தத்தை உயர் அதிகாரிகள் பறிமுதல் செய்த நிலையில், இதில் தொடர்புடையதாக வனத்துறை அதிகாரி உள்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் வனப்பகுதியில் யானை தந்தத்தை பதுக்கி வைத்திருந்ததாக வனத்துறை அதிகாரி உள்பட 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை பகுதியில் வனப்பகுதி அமைந்துள்ளது. இங்கு, காட்டு யானையின் தந்தம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக வனத்துறையின் உயர் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், வனத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வனப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதில், வனப்பகுதியில் ரகசிய இடம் அமைக்கப்பட்டு, அதில் யானையின் தந்தம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. தொடர்ந்து, அந்த தந்தங்களை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். இதில், யானை தந்தம் கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பவத்தில் வனத்துறை அதிகாரி மாரிமுத்து மற்றும் அவருடன் தொடர்புடைய இருவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
வனத்துறை அதிகாரி உள்பட 3 பேர் கைது
அதன் அடிப்படையில், வனத்துறை அதிகாரி மாரிமுத்துவிடம் உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், யானை தந்தத்தை கடத்தி வந்து பதுக்கி வைத்திருந்ததை ஒத்துக்கொண்டார். அத்துடன், அவருக்கு உதவியாக இருவர் இருந்ததையும் தெரிவித்தார். அதன் அடிப்படையில், வனத்துறை அதிகாரி மாரிமுத்து மற்றும் அவரது கூட்டாளிகள் இருவரை வனத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க: பைக் மீது டாரஸ் லாரி மோதி 23 வயது இளம்பெண் உயிரிழப்பு.. சென்னை குரோம்பேட்டையில் நடந்த கோர சம்பவம்..




பெரிய கடத்தல் கும்பல் தொடர்பு உள்ளதா என விசாரணை
இதில், இவர்கள் பின்னணியில் பெரிய கடத்தல் கும்பல் ஏதேனும் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை தீவிர படுத்தப்பட்டுள்ளது. தற்போது, வனத்துறை உயர் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட தந்தம் காட்டுப்பகுதியில் இயற்கையான முறையில் இறந்த யானையிடம் இருந்தோ அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் உயிரிழந்த யானையிடம் இருந்தோ இந்த தந்தங்கள் திருடி கடத்தி வரப்பட்டிருக்கலாம் என வனத்துறை உயர் அதிகாரிகளின் முதல் கட்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.
வனத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பு
யானை தந்தம் கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பவத்தில் வன அதிகாரி உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் வனத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே, திருப்பத்தூர் மாவட்டத்தில் வனத்துறைக்கு சொந்தமான கிடங்கில் வைக்கப்பட்டிருந்த ரூ. 50 லட்சம் மதிப்பிலான 1.75 டன் செம்மரக்கட்டைகள் திருடு போன சம்பவமும், அதனை கண்காணிக்க தவறிய வனத்துறை ஊழியர்கள் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவமும் அண்மையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: தூத்துக்குடியில் கொடூரம்.. மாமனாரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய மருமகன்.. 6 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது!